காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என காலநிலை மாற்ற ஆர்வலரும் லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து கோரி போராட்டம் நடத்தி வருபவருமான சோனம் வாங்சுக் தெரிவித்ததாக வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் சிலர் பகிர்ந்து வருகின்றனர்.


பரப்பப்படும் தகவல் என்ன? இதுகுறித்து ஆராய்ந்ததில், சமீபத்தில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சோனம் வாங்சுக் அளித்த நேர்காணலின் ஒரு பகுதி எடிட் செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் தவறான தகவலாக பரப்பப்பட்டதை பிடிஐ ஃபேக்ட் செக் செய்தி பிரிவு கண்டறிந்ததை தெரிந்து கொண்டோம்.




புகழ்பெற்ற பொறியாளரான சோனம் வாங்சுக், சமீபத்தில் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரியும் அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் அதைச் சேர்ப்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கடும் குளிருக்கு மத்தியில் 21 நாள் உண்ணாவிரத போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார்.


பரப்பப்படும் தகவல் என்ன? காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சோனம் வாங்சுக் தெரிவித்ததாக கடந்த 19ஆம் தேதி பேஸ்புக் பயனர் ஒருவர் வீடியோவை பகிர்ந்தார்.


அந்த வீடியோவின் கேப்ஷனில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டது, "மகசேசே விருது பெற்றவரின் உண்மை முகம் இப்போது வெளிவருகிறது. லேவில் உள்ள சந்தேகத்திற்குரிய செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் காஷ்மீருக்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோருகிறார். தற்போது பிரிவினைவாதியாக மாறியுள்ளார். சுற்றுச்சூழல் ஆர்வலர் என்பது வெறும் முகமூடி மட்டுமே"




உண்மை என்ன? இதுகுறித்து பிடிஐ ஃபேக்ட் செக் செய்தி பிரிவு ஆராய்ந்தது. InVid Tool Search-ஐ பயன்படுத்தி வீடியோவில் இடம்பெற்ற முக்கிய காட்சிகளை எடுத்தோம். கூகுள் லென்ஸ் மூலம் இந்த முக்கியமான காட்சிகளை கொண்டு தேடுகையில், ​​ஒரே மாதிரியான தகவல்களுடன் ஒரே மாறியான வீடியோ பகிரப்பட்டதை கண்டறிந்தோம்.


அந்த வீடியோவின் நம்பகத்தன்மையை அறிய முக்கிய வார்த்தைகளை போட்டு கூகுளில் தேடினோம். அப்போது, வாங்சுக் அளித்த குறிப்பிட்ட நேர்காணலின் முழு வீடியோ கிடைத்தது. காஷ்மீர் தலைவர் ஒருவரின் கருத்தை மேற்கோள் காட்டி வாங்சுக்கிடம் செய்தியாளர் கேள்வி ஒன்றை முன்வைப்பது வீடியோவில் இடம்பெற்றுள்ளது.


யூனியன் பிரதேசமாக இருப்பதை விட காஷ்மீருடன் லடாக் இணையலாமா? என செய்தியாளர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதில் அளித்த வாங்சுக், "பொது வாக்கெடுப்பு பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். எல்லோரும் அப்படி நினைத்தால், ஏன் காஷ்மீரில் அதை நடத்தக்கூடாது? அதாவது, லடாக் மக்கள் ஒப்புக்கொண்டால், காஷ்மீருடன் லடாக் செல்லலாம்" என்றார்.




வைரலாகி வரும் வீடியோ குறித்து வாங்சுக்கை தொடர்பு கொண்டு பேசியபோது, "சொல்லப்படும் கருத்துகளை குறுகிய வீடியோக்களாக தவறான தகவலாக பரப்பப்படுவது வருத்தமளிக்கிறது. காஷ்மீர் குறித்து நான் அப்படி எதுவும் கூறவில்லை" என்றார்.


தீர்ப்பு: வாங்சுக் அளித்த நேர்காணல் வீடியோவின் ஒரு சிறிய பகுதி எடிட் செய்யப்பட்டு தவறான கூற்றுடன் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.



பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக NewsChecker என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தியை மொழிமாற்றம் செய்து சற்றே திருத்தி எழுதியுள்ளது.