Election History: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி அதிரடி காட்டி வருகிறது.


ஜனநாயகத்தை கொண்டாடும் திருவிழா:


இப்படிப்பட்ட சூழலில், கடந்த சனிக்கிழமை தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியானது. கடந்தமுறையை போன்று, இந்த தடவையும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஜூன் மாதம் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பீகார், உத்தர பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.


முதல்கட்டத்திலேயே தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்கிறது. மக்களவை தேர்தலை தவிர, ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது.


4 நாள்களில் நடத்தி முடிக்கப்பட்ட பொதுத்தேர்தல்:


நவீன தொழில்நுட்பம், பாதுகாப்புக்கு தேவையான ராணுவ வீரர்கள் என அனைத்து வசதிகள் இருக்கும்போதிலும், ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுவது ஏன் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.


அறிவியல் தொழில்நுட்பம் உச்சம் தொட்ட காலத்திலேயே மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், அறிவியல் பெரிய அளவில் வளர்ச்சி அடையாத காலக்கட்டமான 1980ஆம் ஆண்டு, 4 நாள்களில் பொதுத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. 


கல்வி அறிவு இல்லாதவர்கள், ஏழ்மையில் வாடுபவர்கள் அதிகமாக இருக்கும் நாட்டில் தேர்தல் நடத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இருப்பினும், பல சவால்களுக்கு மத்தியில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 1980ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 3ஆம் தேதி தொடங்கிய நாட்டின் 7ஆவது பொதுத்தேர்தல் 6ஆம் தேதி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.


அரசியல் நிலவரம்:


கடந்த 1977ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் முதல்முறையாக காங்கிரஸ் அல்லாத ஒரு அரசாங்கம் அமைந்தது. ஜனதா கட்சி ஆட்சி அமைத்து, மொரார்ஜி தேசாய் பிரதமரானார். பல கட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்ட ஜனதா கட்சி உடைந்ததால் அரசாங்கம், 5 ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்யாமலேயே கவிழ்ந்தது.


இதையடுத்து, 1980ஆம் ஆண்டு, இந்தியாவில் மக்களவை தேர்தல் நடத்தப்பட்டது. அதில், இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் நாடு முழுவதும் 353 தொகுதிகளை கைப்பற்றி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. தமிழ்நாட்டில் இந்திரா காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட திமுக 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை கைப்பற்றியது.


இதையும் படிக்க: Election History: 68 கட்டங்கள்.. 4 மாதங்களாக நடத்தப்பட்ட முதல் பொதுத்தேர்தல்.. வியக்கவைக்கும் ஜனநாயக திருவிழா!