டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் மோடியின் புதிய அரசு இன்று பதவியேற்று கொண்டது. மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்று கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.


மோடிக்கு இணையாக கிடைத்த கரகோஷம்: பதவியேற்பு விழாவுக்கு வந்த உலக தலைவர்கள், இந்திய தலைவர்கள், உயர்மட்ட அரசு அதிகாரிகள், பிரபலங்களுக்கு மத்தியில் பலத்த கரகோஷத்துடன் மோடி பதவியேற்று கொண்டார். அவருக்கு இணையாக மற்றொருவருக்கும் பலத்த கரகோஷம் எழுப்பப்பட்டது.


அவர் வேறு யாரும் அல்ல, மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சிவராஜ் சிங் சவுகான். மோடிக்கு இணையாக சிவராஜ் சிங் சவுகானுக்கு கரகோஷம் எழுப்பப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.


மத்திய பிரதேச முதலமைச்சராக கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக பதவி வகித்தவர் சிவராஜ் சிங் சவுகான். மொத்தம் 4 முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். ஐந்தாவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பதில் மோகன் யாதவுக்கு முதலமைசச்சர் பதவி வழங்கப்பட்டது.


இதையடுத்து, மத்திய அமைச்சரவையில் இடம் தரலாம் என தகவல்கள் வெளியாகின. வெளியான தகவல்கள் உண்மையாகும் விதமாக இன்று மத்திய அமைச்சராக பதவியேற்று கொண்டார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் விதிஷா மக்களவை தொகுதியில் போட்டியிட்டு சுமார் 8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தார்.


 






யார் இந்த சிவராஜ் சிங் சவுகான்? நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் இவரும் ஒருவர். பாஜகவின் தாய் அமைப்பாக கருதப்படும் ஆர்.எஸ்.எஸ்-இல் தனது பொது வாழ்க்கையை தொடங்கிய சிவராஜ் சிங் சவுகான், 1970-80களில் மாணவர் அரசியலில் நுழைந்தார்.


எமர்ஜென்சியின்போது சிறிது காலம் தலைமறைவாக இருந்து பின்னர் கைது செய்யப்பட்டார். கடந்த 1990ஆம் ஆண்டு தேர்தல் அரசியலில் நுழைந்த இவர், புத்னி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்கு அடுத்த ஆண்டே, மக்களவை தேர்தலில் விதிஷா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


கடந்த 2005ஆம் ஆண்டு, மத்திய பிரதேச பாஜக தலைவராக பதவி வகித்த போது, அம்மாநில முதலமைச்சர் பதவி சிவராஜ் சிங் சவுகானுக்கு வழங்கப்பட்டது. இப்படி படிப்படியாக அரசியலில் வளர்ந்து தற்போது மத்திய அமைச்சராக உயர்ந்துள்ளார்.


மோடி, சிவராஜ் சிங் சவுகானை தவிர பாஜகவின் மூத்த தலைவர்களான ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, அமித் ஷா உள்ளிட்டோரும் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்.