பாஜகவின் முக்கிய தலைவர்களும் முன்னாள் மத்திய அமைச்சர்களுமான ஸ்மிருதி இரானி, அனுராக் தாகூர், நாராயண் ராணே ஆகியோருக்கு மத்திய அமைச்சரவையில் இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஸ்மிருதி இரானி: உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மாவிடம்  1.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் ஸ்மிருதி இரானி. கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அமேதியில் களமிறக்கப்பட்ட ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தியிடம் தோல்வி அடைந்தார்.


இருப்பினும், அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 2019 மக்களவை தேர்தலில் ராகுல் காந்தியை 55,120 வாக்குகள் வித்தியாத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். முதலில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக சிறிது காலம் பதவி வகித்தார்.


பின்னர், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராக 10 மாதங்கள் பதவி வகித்தார். இதையடுத்து, ஜவுளித்துறை அமைச்சராகவும் சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சராகவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சராகவும் பதவி வகித்தார்.


அனுராக் தாகூர்: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இமாச்சல பிரதேசம் மாநிலம் ஹமீர்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தாலும் மத்திய அமைச்சரவையில் அனுராக் தாகூருக்கு இடம் தரப்படவில்லை. 


கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையில் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை இணை அமைச்சராக பதவி வகித்தவர் அனுராக் தாகூர். பின்னர், அவருக்கு மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத்துறை, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.


நாராயண் ராணே: மோடியின் இரண்டாவது அமைச்சரவையில் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சராக பதவி வகித்தவர் நாராயண் ராணே.


நடந்து முடிந்த தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி-சிந்துதுர்க் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். மகாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சரான இவர், சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார்.


அர்ஜூன் முண்டா: ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட அர்ஜூன் முண்டா, காங்கிரஸ் வேட்பாளர் காளிசரண் முண்டாவிடம் தோல்வி அடைந்தார். ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைைச்சரான இவர், மோடியின் இரண்டாவது அமைச்சரவையில் பழங்குடி நலத்துறை அமைச்சராகவும் விவசாயிகள் மற்றும் வேளாண்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.


பாஜகவின் மூத்த தலைவர்களான ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, அமித் ஷா உள்ளிட்டோருக்கு மத்திய அமைச்சரவையில் இந்த முறையும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர, நிர்மலா சீதாராமன், எஸ். ஜெய்சங்கர், மன்சுக் மாண்டவியா, பியூஷ் கோயல், அஷ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான், பூபேந்திர யாதவ், பிரஹலாத் ஜோஷி, கிரண் ரிஜிஜு ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


இதையும் வாசிக்கலாம்: Group 4 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி இருந்தது?- கட் ஆஃப் குறையுமா? தேர்வர்கள் என்ன சொல்கிறார்கள்?