மக்களவையில், பாஜகவை கடுமையாக விமர்சித்து வரும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தன் மீது அமலாக்கத்துறையால் சோதனை நடத்தப்படலாம் என்று கூறியதை அடுத்து, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளது. அது என்னவென்றால் பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக பேசி வருவதன் காரணமாக ராகுல் காந்தி மற்றும் சில எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான தாக்குதல் நடத்த சதி நடக்கிறது என்பது குறித்த அச்சத்தை தெரிவித்துள்ளது.
ராகுல் சக்கரவியூக பேச்சு:
கடந்த ஜூலை 29 ஆம் தேதி, மக்களவையில் ராகுல் காந்தியின் "சக்கரவியூக" பேச்சு பாஜகவுக்கு பிடிக்கவில்லை என்றும், அமலாக்கத்துறையைப் பயன்படுத்தி பதிலடி கொடுக்க தயாராகி வருவதாகவும் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை கூறினார்.
மகாபாரதத்தில் நடந்த குருக்ஷேத்திரப் போரில் கௌரவர்கள் அபிமன்யுவை மாட்டிக்கொண்டது போல் இந்திய இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், சிறு வணிகர்கள் ஆகியோர் ஏமாற்றப்படுவதாக ராகுல் காந்தி தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். இது பாஜகவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது
சிவசேனா அதிர்ச்சி தகவல்:
இந்நிலையில், சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்ததாவது, ராகுல் காந்தி உட்பட அரசுக்கு எதிராக பேசுபவர்களுக்கு எதிராக வெளிநாட்டில் சதி நடக்கிறது. “ராகுல் காந்தி மட்டுமல்ல, ஜனநாயகத்தைக் காப்பாற்ற அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பும் அனைவருக்கு எதிராகவும் சதித் திட்டம் தீட்டப்படுகிறது. வெளிநாட்டில் இந்தச் சதித் திட்டம் தீட்டப்படுகிறது. எது வேண்டுமானாலும் நடக்கலாம், ராகுல் காந்தி மீது தாக்குதல் நடத்தப்படலாம், நம் அனைவரும் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என சஞ்சய் ராவுத் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், ராகுல் காந்தி மீது ஆதாரமற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டால், இந்திய கூட்டணியின் அனைத்து தரப்பினரும் கடும் போராட்டங்களை நடத்துவோம் என சிவசேனா தலைவர் பிரியங்கா சதுர்வேதி தெரிவித்துள்ளார்.