Senthil Balaji Arrest: அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்த சம்பவத்தால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை நேரில் சென்று நலம் விசாரிக்க அமைச்சர்கள் மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி கைது சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பதாவது, "சட்டவிரோத பார்களால் ரூபாய் இரண்டு ஆயிரம் கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது. மேலும், ஒரு பார் தனது வருவாயில் ஒன்றரை சதவீதம் மற்றும் இரண்டு சதவீதம் அரசுக்கு டி.டி. எடுக்க வேண்டும். ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜி மாவட்டந்தோறும் தனது ஆட்களை நியமித்து தனது ஒரு குடும்பத்திற்கு அந்த பண்ம் செல்லும் வகையில் ஏற்பாடு செய்துள்ளார். இதன் மூலம் மட்டும் மாதம் 50 முதல் 60 கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளனர். சட்டவிரோத பார்களால் 2 ஆயிரம் கோடி முறைகேடு செய்துள்ளார். சட்டவிரோத மது விற்பனையால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தான் அமலாக்கத்துறையும் வருமானவரித்துறையும் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அந்த பேட்டியில், நகமும் சதையுமாக அமைச்சரும் முதலமைச்சரும் உள்ளனர். குறிப்பாக, அண்ணாநகரில் சட்டமன்ற உறுப்பினர் மோகன் வீட்டில் சோதனை நடைபெற்றபோது ஏன் நீங்கள் இப்படி நடந்துகொள்ளவில்லை. வருமானவரித்துறைக்கும் அமலாக்கத்துறைக்கும் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் எனக் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி கைதாகி செல்லவேண்டியது தானே? அமைச்சர் ரகுபதி மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது என கூறுகிறார், மாநகராட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட்டது செய்திகளில் வந்தது. தவறு செய்தவர்களை பிடித்துக் கொடுத்ததற்காக என்னை 20 நாட்கள் சிறையில் அடைத்தார்கள். இரவு நேரத்தில் என்னை கைது செய்ய வந்த காவல் துறைக்கு நான் ஒத்துழைப்பு கொடுத்தேன். நான் மாத்திரை சாப்பிட்டுவிட்டு வருகிறேன் என்றேன் அதற்கு அனுமதிக்கவில்லை, உடை மாற்ற அனுமதிக்கவில்லை. மேலும் நீதிமன்றத்தில், என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறினார்கள், ஆனால் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வில்லை. மேலும் கைது செய்த பின்னர் 2 மணிநேரம் சென்னையைச் சுற்றி காட்டிய பின்னர், நள்ளிரவு 12.30 மணிக்கு என்னை நீதிமன்றத்திலஆஜர் படுத்தினர். அப்போது எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. அது மனித உரிமை மீறல் இல்லையா என கேள்வி எழுப்பினார்.