தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள பாரதமாத கோயிலுக்கு கடந்த மாதம் 11 ஆம் தேதி தமிழக பாஜக துணைத் தலைவர் சென்ற போது, கோயில் பூட்டிய நிலையில் இருந்துள்ளது. அதன் பின்னர் பூட்டை உடைத்து கோயிலுக்குள் சென்று பாரதமாதா சிலைக்கு மாலை அணிவித்துள்ளனர். ஆனால் இவர்கள் பூட்டை உடைக்கும் முன்னரே காவல் துறையினரும் கோயில் நிர்வாக அதிகாரிகளும் வெளியில் நின்று வழிபாடு செய்துவிட்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.


இதனை கேட்காமல், கோயில் பூட்டை உடைத்த பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உட்பட 50 பேர் மீது பாப்பாரப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். கடந்த 14 ஆம் தேதி இரவு 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சட்டத்தினை மீறும் செயலைச் செய்ததற்காகவும், அதனை முன்னின்று செய்ததற்காகவும் தமிழக பாஜக துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் கைது செய்யப்பட்ட நிலையில் அங்கிருந்து மருத்துவ பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவருக்கு ரத்த கொதிப்பு, நெஞ்சுவலி உள்ளிட்ட உடல் பிரச்சினைகள் இருப்பதாக ராமலிங்கம் போலீசாரிடம் தெரிவித்தார். அதன்பின் பாப்பாரப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், உயர் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு மாற்றப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதை அறிந்த பாரதிய ஜனதா கட்சியினர் தொண்டர்கள் ஏராளமானோர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் குவிந்தனர். ஆம்புலன்ஸில் இருந்து மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் அழைத்து வரப்பட்டபோது அவரை பார்க்க பாஜக தொண்டர்கள் முற்பட்டனர்.


இதனால், நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மருத்துவமனைக்கு உள்ளே அனுமதிக்க கோரி பாஜக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினருக்கும் பாஜகவினருக்கும் கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கே.பி.ராமலிங்கம் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 


இதனையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஜக துணை தலைவர் கே பி ராமலிங்கத்தை பென்னாகரம் கிளை நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்தினார். விசாரணை முடிவில் அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். காவல்துறையினரின் கண்காணிப்பில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை முடிவடைந்த நிலையில் தர்மபுரி காவல்துறையினர் சிறையில் அடைப்பதற்கு மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது அவரை காவல்துறையினர் அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.



இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி மேலிட இணைப் பார்வையாளர் சுதாகர் ரெட்டி, மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், மாநில அமைப்பு செயலாளர் ஏ.பி.முருகானந்தம் ஆகியோர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கே.பி.ராமலிங்கத்தை  நேரில் சந்தித்து பேசினர். இதனையடுத்து  சுதாகர் ரெட்டி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ பாரதிய ஜனதா கட்சி பாரதமாதா மணி மண்டப பிரச்னையில் சட்டத்தை மதிக்கிறது. அதேநேரத்தில் கே.பி.ராமலிங்கத்தை மனிதாபிமான அடிப்படையில் திமுக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். அவருடன் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டும். கே.பி.ராமலிங்கம் கைது செய்யப்பட்டபோது திமுக அரசு அடக்குமுறைகளை கையாண்டுள்ளது. மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த அவரை மனிதாபிமானமற்ற முறையில் கைது செய்துள்ளனர். 75-வது சுதந்திர தினத்தையொட்டி பாரத மாதா மணிமண்டபத்திற்குள்ளே சென்று மலர்தூவி மரியாதை செலுத்த முயன்றவர்களை கைது செய்தது ஏற்புடையதாக இல்லை. இரண்டு முறை எம்.எல்.ஏ, இரண்டு முறை எம்.பி. யாக இருந்த கே.பி.ராமலிங்கத்தை அரசியல் ரீதியாக பழிவாங்கும் விதமாக கைது செய்யப்பட்டுள்ளார். சட்டத்தின் மீது நாங்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளோம். ஆனால் தமிழ்நாடு முழுவதும் பாஜக நிர்வாகிகளை திமுக அரசு தேவையின்றி கைது செய்து வருகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று கூறினார்.