த.வெ.க - வில் இணைந்த செங்கோட்டையன்
அ.தி.மு.க. வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைவதாக கூறப்பட்டது. செங்கோட்டையனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் இணைவதாகவும் தகவல் வெளியாகி வந்தது. இந்த நிலையில் , கோபி செட்டிபாளையத்தில் இருந்து பேருந்தில் த.வெ.க. அலுவலகத்திற்கு வருகை தந்த செங்கோட்டையன் , ஆதரவாளர்களை புஸ்.சி ஆனந்தன் வரவேற்றார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்காக அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. சத்தியபாமா, அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹசானா, புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய பனையூர் அலுவலகம் வந்தனர். இதற்கிடையே செங்கோட்டையனும் த.வெ.க. அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவரை புஸ்சி ஆனந்த் வரவேற்று அழைத்து சென்றார்.
இதனை தொடர்ந்து த.வெ.க. அலுவலகத்திற்கு தலைவர் விஜய், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதர் அர்ஜூனா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வருகை தந்தனர். இதன் பின் நடைபெற்ற இணைப்பு விழாவில் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் இணைந்தனர்.
இந்நிலையில் , சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது ;
நான் பெரிதும் மதிக்கக் கூடியவர் அண்ணன் செங்கோட்டையன். அவர் ஒரு முடிவு எடுத்து த.வெ.க - வில் இணைந்துள்ளார். அதனால் ஒரு கருத்து தான் சொல்ல முடியும் , எங்கிருந்தாலும் வாழ்க. அதே போல் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பின் ஜெயக்குமாரும் செல்கிறார் என்று சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. எனக்கு எப்போதும் ஒரே கட்சி தான். நேற்று , இன்று , நாளை , ஏன் செத்தாலும் அதிமுக கொடியுடன் தான் செல்வேன். யார் வீட்டின் முன்பாகவும் சென்று காத்திருப்பவன் நான் அல்ல.
அதிமுக தான் புலி - எலி எது என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்
புலிக்கு வாலாக இருப்பதே பெருமை. ஆனால் எலிக்கு தலையாக இருக்க கூடாது. இங்கே அதிமுக தான் புலி. எலி என்று எந்தெந்த கட்சிகளை சொல்கிறேன் என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம். எனது வாழ்நாளில் புலிக்கு வாலாக இருப்பதையே பெருமையாக கருதுகிறேன். எலிக்கு தலையாக இருந்து பிரயோஜனம் கிடையாது. நான் தி.மு.க.வுக்கோ, த.வெ.க.வுக்கோ போக மாட்டேன். அது ஒரு நாள் நடக்காது.
புகழை பாடும் வானம்பாடியாகவே இருப்பேன்
அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கத்தில் இருப்பதே எனக்கு பெருமை. அதிமுக தான் சபாநாயகர், அமைச்சர், மாவட்டச் செயலாளர், மாணவரணி செயலாளர், எம்ஜிஆர் மன்ற செயலாளர் என்று 15 - க்கும் அதிகமாக பதவிகளை கொடுத்தது. அதனால் வாழ் நாள் முழுக்க எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் புகழை பாடும் வானம்பாடியாகவே இருப்பேன். வேறு எங்கும் செல்ல மாட்டேன்.