அரசியலில் விஜய்

திரைத்துறையில் இருந்து அரசியலில் கால் வைத்துள்ளார் நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியவர், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு களத்தில் இறங்கியுள்ளார். அந்த வகையில் திமுக - அதிமுகவிற்கு டப் கொடுக்கும் வகையில் செல்லும் இடமெங்கும் பல ஆயிரம் இளைஞர்கள் கூடி வருகிறார்கள். எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் வாக்கு சதவிகிதம் அனைவரின் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் அரசியலில் பணியாற்றிய செங்கோட்டையன் திடீரென தவெகவில் இணைந்தார். இதனையடுத்து தவெகவில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டது. 

Continues below advertisement

தவெக மீது அதிருப்தியில் செங்கோட்டையன்

இந்த நிலையில் அடுத்த சில நாட்களிலேயே செங்கோட்டையன் உடன் இணைந்த அதிமுகவினருக்கு பொறுப்புகள் வழங்குவது தொடர்பான பட்டியலை தவெக நிர்வாகிகளிடம் செங்கோட்டையன் வழங்கியுள்ளார். ஆனால் யாருக்கும் எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லையென கூறப்படுகிறது. மேலும் மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையனை தவெகவில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனாவிற்கு அடுத்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளார். இதனால் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் நேற்று நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியில், விஜய்யை சந்திக்க செங்கோட்டையன் பல முறை முயன்ற நிலையில் முடியாமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகவும்,

தவெக மாவட்ட செயலாளர்களிடம் பேசுவதாக இருந்தால் கூட பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அனுமதி கொடுத்தால் மட்டுமே பேசும் நிலைக்கு செங்கோட்டையன் தள்ளப்பட்டுள்ளதாக அந்த நாளிதழில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக செங்கோட்டையன் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் எனவே ஏன் தவெகவிற்கு வந்தோம் என யோசித்து வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செங்கோட்டையன் திடீரென சமுகவலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Continues below advertisement

 

விஜய்யை முதலமைச்சராக்குவோம்- செங்கோட்டையன்

அதில், புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் வந்தவன் நான். சோதனை ஏற்பட்ட போது என்னை கரம் பிடித்து அரசியலில் ஒரு வரலாறு படைகின்ற அளவிற்கு இன்று என்னை உருவாக்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி அவர்கள் என்றும் என் நெஞ்சத்தில் நீங்கா இடம் பெற்றவர் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் ( விஜய்) 2026 இல் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகும் வரை நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மக்கள் செல்வாக்கோடு அவரை ஆட்சி கட்டிலில் அமர வைப்போம். அவருடைய தியாகத்தையும், மனித நேயத்தையும் எவராலும் ஒப்பிட இயலாது எனவும் கூறியுள்ளார். மக்கள் நெஞ்சங்களில் நிறைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார். 

எங்கள் வாழ்வும், தமிழகத்தின் எதிர்காலமும், அவருடைய தலைமையில் அமையப் போகின்றது. அதற்காகத்தான் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம். எனவே நாளிதழில் உண்மைக்கு மாறான செய்தி வெளியாகி இருப்பது வேதனை அளிப்பதாக கூறியுள்ளவர், நடு நிலை என்று சொல்லிக்கொண்டு இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிடுவது பத்திரிகை தர்மத்திற்கு உகந்ததல்ல என செங்கோட்டையன் கூறியுள்ளார்.