ஒரு லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டி இருந்த நிலையில் ஒரு லட்சம் ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதற்கான ஆவணங்களை எச்.ராஜா அளித்தால் அதனை மீட்க உடனடி நடவடிக்கை அமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். அமைச்சர் சேகர்பாபுவின் இந்த கருத்துக்கு சிவகங்கையில் பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பதிலளித்துள்ளார். 



சிவகங்கையில் பா.ஜ.க பிரமுகர் ஒருவரின் இல்ல விழாவில் பங்கேற்கவந்த பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அதில் பேசிய அவர்,


கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்புகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தவறான தகவல்களை அளித்துவருவதாக குற்றம்சாட்டினார். இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நல்ல ஆன்மிகவாதி என்றும் ஆனால் அவரை அதிகாரிகள் தவறாக வழிநடத்துகிறார்கள் எனவும் குற்றம்சாட்டிய எச்.ராஜா,


கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கெளரி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 148 ஏக்கர் நிலத்தில் 11 ஏக்கர் நிலத்தை மட்டும் மீட்டுவிட்டு முழுவதுமாக மீட்டதுபோல் அமைச்சர் சேகர்பாபுவை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தவறாக வழிநடத்துவதாக குற்றம்சாட்டிய அவர், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலங்களின் ஆவணங்களை நான் வழங்கினால் நடவடிக்கை எடுப்பதாக அறநிலையத்துறை அமைச்சர் கூறினார், ஆனால் கோவில் நிலங்களை மீட்க நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளை அமல்படுத்தினாலே போதும் அவருக்கு நன்றி தெரிவிப்பேன் என்று எச்.ராஜா தெரிவித்தார்


முன்னாள் அமைச்சர் பொங்களூர் பழனிச்சாமியின் கலைஞர் கல்லூரி வளாகத்திலேயே கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள எச்.ராஜா, அதையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மீட்க வேண்டும் என்று கூறினார். கடந்த 56 ஆண்டுகளாக இந்து கோவில்களை அழிக்கும் பணியைதான் தமிழக அரசாங்கங்கள் செய்துவருவதாகவும் எச்.ராஜா கூறினார்


பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பேட்டி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எச்.ராஜா, படிப்பு, பாரம்பரியம் என தற்பெருமை பேசாமல் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழகத்தின் நிதியை நிர்வாகம் செய்யவேண்டும் என்று அறிவுரை கூறினார். 


கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு காவிரி அணையின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் நடவடிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த எச்.ராஜா, நதிநீர் பங்கீட்டில் துரோகம் செய்த்தது திமுக அரசாங்கமே என்றும் அன்றைக்கு தவறு இழைத்தவர் கருணாநிதி என்றும் குற்றம்சாட்டினார். நீட் தேர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு எனவும் இதை மாற்ற முடியாது எனவும் கூறிய எச்.ராஜா ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களை ஏமாற்ற வேண்டாம் என்று தெரிவித்தார்