உலக நாயகன் கமல் ஹாசன் இன்று தனது 67ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.
அந்தவகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், “தனது அளப்பெரும் நடிப்பாற்றலால் தமிழ்த்திரையுலகைத் தலைநிமிரச்செய்த ஒப்பற்றப் பெருங்கலைஞன் - தனித்துவமிக்கச் செயல்பாடுகளாலும், புதுமை முயற்சிகளாலும் திரைக்கலை வடிவத்திற்கு புத்துயிர் ஊட்டுகிற தலைசிறந்த படைப்பாளி – பன்முகத்திறன் கொண்டு, திரைக்கலையின் உச்சம் தொட்டு,
தலைமுறைகளைக் கடந்து மக்கள் மனங்களில் பேராதிக்கம் செய்கிற திரை ஆளுமை – மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் அன்பிற்கினிய அண்ணன் கமலஹாசன் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
சீமானின் இந்த வாழ்த்துக்கு கமல் ஹாசனும் நன்றி தெரிவித்துள்ளார். அவர் சீமானின் ட்வீட்டை ரீட்வீட் செய்து உள்ளம் கவர்ந்த அன்புத் தம்பி சீமானுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்
சீமானை உள்ளம் கவர்ந்த அன்பு தம்பி என கமல் விளித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சீமானின் வாழ்த்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டிய அவசியமில்லை என சிலர் கூறுகின்றனர். சீமானின் மேடை பேச்சு முதிர்ச்சியற்ற தன்மையிலும், பிற்போக்குத்தனமாகவும் இருக்கும் சூழலில் தன்னை முற்போக்குவாதி என்று காட்டிக்கொள்ளும் கமலை எந்த விதத்தில் சீமான் கவர்ந்துவிட்டார். ஒருவேளை அரசியல் களத்தில் சீமானோடு கைகோர்ப்பதற்காக இந்த புது பாசம் முளைத்திருக்கிறதோ எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அதேசமயம் பிறந்தநாளன்று தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும்போது இதுபோன்று கூறுவது சாதாரணமான ஒன்றுதான். முதலமைச்சர் தெரிவித்த வாழ்த்துக்கு இனிய நண்பரும், முதல்வர்களில் முன்னுதாரணமாகத் திகழ்பவருமான ஸ்டாலின் அவர்களே, தங்களின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் என் பிறந்தநாளுக்கு மேலும் வர்ணம் சேர்க்கிறது. அன்பும் நன்றியும் என கூறியிருக்கிறார்.
அதேபோல் திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்த வாழ்த்துக்கு அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி என சொல்லியிருக்கிறார். எனில் திமுகவுடன் கமல் கைகோர்க்க போகிறாரா என்ற வாதத்தையும் ஒரு தரப்பினர் முன்வைக்கின்றனர்.
ஆனால், அரசியலில் காட்சிகள் மாறுவது இயல்பு என்பதால் எதிர்பாராததையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.முன்னதாக கமல் ஹாசன் கட்சி ஆரம்பித்தபோது சீமானை சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பது நினைவுகூரத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்