நடிகராகவும் இயக்குநராகவும் இருந்த சீமானைத் தலைமை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு 2010-ல் தொடங்கப்பட்டது நாம் தமிழர் கட்சி ஆகும். தமிழ்நாடுபுதுச்சேரியில் செயல்படும் அரசியல் கட்சியான நாம் தமிழருக்கு, தற்போது மாநிலக் கட்சி அங்கீகாரம் கிடைக்க உள்ளது. 2024 தேர்தலில் 8 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்றதால் இது சாத்தியம் ஆகியுள்ளது. முதல்முறை 1 சதவீதத்தைப் பெற்ற நாதகவின் வாக்கு வங்கி, கூட்டணி இல்லாமல், எட்டே ஆண்டுகளில் 8 சதவீதமாக உயர்ந்திருப்பது எப்படி?


2010-ல் கட்சி தொடங்கப்பட்டாலும் 2016ஆம் ஆண்டில் இருந்துதான் நாம் தமிழர் கட்சி, தேர்தல்களில் போட்டியிட ஆரம்பித்தது. அதற்கு முன்பாக 2011 சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 2014 மக்களவை தேர்தல்களில் நாதக போட்டியிடவில்லை. ஆனாலும் 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்து, எல்லாத் தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட்டு வருகிறது நாம் தமிழர். 2016-ல் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 1.07% வாக்குகளைப் பெற்றது. 2017 ஆர்.கே.நகர் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் போட்டியிட்டு 2.15% வாக்குகளை நாதக தன் வசப்படுத்தியது.  


இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் மறுப்பு


தொடர்ந்து 2019ஆம் ஆண்டு டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்டதை அடுத்து, டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. 3.15% வாக்குகளைப் பெற்றது. கட்சி ஆரம்பித்த புதிதில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்ட நாதகவுக்கு, 2019-ல் சின்னம் மறுக்கப்பட்டது. மேகாலயா மாநிலக் கட்சிக்கு அந்தச் சின்னம் ஒதுக்கப்பட்டதாகக் காரணம் கூறப்பட்டது.


இதையடுத்து கரும்பு விவசாயி சின்னத்தில் நாதக போட்டியிடத் தொடங்கியது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 3.89% வாக்குகளைப் பெற்றது நாம் தமிழர். தொடர்ந்து 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 6.72 சதவீத வாக்குகளைப் பெற்றது. அதேபோல ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் 6.35 சதவீத வாக்குகளைத் தன்வசப்படுத்தியது. தற்போது 2024 மக்களவைத் தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்டது. கடைசி நேரத்தில், மைக் சின்னத்தில் போட்டியிட்டு, தமிழ்நாடு முழுவதும் 8.1 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இதன்மூலம் நாளுக்கு நாள் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி உயர்ந்து வருவதைக் காண முடிகிறது.


இதற்கு என்ன காரணங்கள் இருக்க முடியும்?


தனித்தே களம் காணும் தனித்துவம்


திமுக உட்பட எவ்வளவு பெரிய கட்சியாக இருந்தாலும் கூட்டணி அமைத்துக் களம் காண்பதே அனைத்துக் கட்சிகளின் அரசியல் கணக்காக இருக்கிறது. கூட்டணி மாறும்போது கொள்கைகளிலும் சமரசம் செய்யவேண்டிய அவசியம் கட்சிகளுக்கு ஏற்படுகிறது. ஆனால் கட்சி தொடங்கியதில் இருந்தே தனித்துத்தான் களம் காண்கிறது நாம் தமிழர்.


சீமானின் சரளமான பேச்சு


சீமானின் வசீகரத் தலைமை நாதகவுக்கு ஒருசேர பலமாகவும் பலவீனமாகவும் இருந்து வருகிறது. சீமானின் சரளமான பேச்சுக்கு, படித்தவர்கள் உட்பட ஏகப்பட்ட நெட்டிசன்கள் ரசிகர்களாக இருந்து வருகிறார்கள்.


மாற்றம் விரும்புவோருக்கான களம்


திமுக, அதிமுக, பாஜக என வழக்கமான கட்சி அரசியலில் இருந்து மாற்றம் விரும்புவோரில் பலரும் நாம் தமிழருக்கு வாக்களிப்பதைக் காண முடிகிறது. மாற்றம் வேண்டும் என்பவர்களுக்கான தேர்வில் முக்கியமான ஒன்றாக நாம் தமிழர் கட்சி மாறி வருகிறது.


திராவிட எதிர்ப்பு- தமிழர் பிரச்சாரம்


’’தமிழ்நாட்டில் சாதி, மத வேறுபாடுகள் இன்றி தமிழர் என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்து செயல்பட வேண்டும். தமிழர்களுக்கு உரிய வேலைவாய்ப்புகள், வசதிகள், வாய்ப்புகள் உறுதி செய்யப்பட வேண்டும்; திராவிடம் என்று ஒன்று இல்லவே இல்லை’’ என்றெல்லாம் கோரி இளைஞர்களின் ஓட்டுகளை நாதக கவர்கிறது. நாம் தமிழருக்கு வாக்களிப்பவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பதை நினைவில் கொள்ளலாம்.


ஓட்டுக்கு பணம் இல்லை


ஓட்டுக்குப் பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டது நேர்மையான வாக்காளர்களைக் கவர்ந்தது.


பெண்களுக்கான நிரந்தர பிரதிநிதித்துவம்


பெரிய கட்சிகளே பெண் வேட்பாளர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் தராத சூழலில், நாம் தமிழர் கட்சி பாதிக்குப் பாதி என்ற அளவில் எப்போதும் பெண்களை முன்னிறுத்தி தேர்தல் களம் கண்டு வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளாக இருந்தாலும் சரி, மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளாக இருந்தாலும் சரி, பாதிக்குப் பாதி பெண் வேட்பாளர்களே களம் காண்கின்றனர். இதுவும் நாம் தமிழர் மீதான மதிப்பை உயர்த்தி உள்ளது.


இதனால் தமிழ்நாட்டில் வளர்ந்தே தீருவோம் என்று சீமான் கூறியதைச் செய்து வருகிறார் என்று நாதக தொண்டர்கள் மத்தியில் புளகாங்கிதம் அடைந்து வருகின்றனர்.