9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆனது நடைபெற்று வருகிறது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் ஒரு நாள் சுற்றுப்பயணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரணிபுத்தூர், சுங்குவார்சத்திரம், எடயார்பாக்கம்,வாலாஜாபாத், படப்பை, வண்டலூர் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பிரச்சாரம் ஈடுபட்டு வந்த நிலையில்  காஞ்சிபுரம் மேட்டு தெருவில் உள்ள  திருமண மண்டபம் கலந்தாய்வு நடைபெற்றது.

 


அதில் கட்சி நிர்வாகிகளுடன் பேசிய சீமான், மாற்றத்தை அடிமட்டத்தில் இருந்து கொண்டு வரவேண்டும், மாற்றத்தை அடிமட்டத்தில் இருந்து கொண்டு வருவதற்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் உதவி செய்யும். இன்று உங்களுக்கு ஓட்டுக்காக பணம் கொடுக்கும், வேட்பாளர்கள் உங்களிடம் பத்து மடங்கு அதிகமாக சம்பாதிப்பார்கள். நாளை உங்களுடைய அடிப்படை தேவைக்காக அவர்கள் கையெழுத்துப் போட உங்களிடம் பணத்தை எதிர்பார்ப்பார்கள்.

 

ஒரு தனி நபருக்காக பள்ளிக்கூடம், சாலை மருத்துவமனை ,கட்டிக் கொள்ள முடியாது அதற்காகத்தான் வரி என்ற பெயரில் பணம் கொடுத்து அதை நிர்வகிக்க அரசை கண்டிக்கிறோம். ஆனால் இங்கு அனைவருக்கும் சமமான கல்வி சமமான மருத்துவம் கிடைப்பதில்லை .2016 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து நின்றது. அதற்கடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்றது கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து நின்று வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து தான் எதிர்கொள்ளும் என தெரிவித்தார்.

 

 இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பேசுகையில், தேர்தல் ஆணையம் என்பது நாடக கம்பெனி. பறக்கும் படை அமைப்பார்கள், அப்பாவி மக்கள் இடம் பணம் பறிப்பார்கள். ஆகவே தேர்தல் ஆணையத்தையே சீர்திருத்த வேண்டும். தற்போது அரசியல் என்பது சாதி , மதம் , சாராயம், கவர்ச்சி, பணம் ஆகிய ஐந்து தூண்களை உங்களால் கட்டமைக்கப்படுகிறது. சாதி, மதம் , சாராயம் தாண்டினாலும் பணத்தை தாண்ட முடியவில்லை.



9 மாவட்ட தேர்தலில் மூக்குத்தி, அண்டா, குண்டா, பட்டு சேலைகளை மொத்தமாக அள்ளிச் சென்று உள்ளார்கள். எம்பி எம்எல்ஏக்கள் அதைவிட அதிக வருமானம் ஈட்டும்  தொழிலாக உள்ளாட்சி பதவி உள்ளது. குறுநில மன்னர்கள் போல உள்ளாட்சி பதவியில் உள்ளவர்கள் செயல்படுவார்கள். குறைந்த ஜனநாயகம் அதிகபட்சம் பணநாயகம் ஆக மாறியுள்ளது. இது ஒரு அங்கீகரிக்கப்பட்ட செயலாக மாறியுள்ளது. விவசாய கடன், தள்ளுபடி நகை கடன் தள்ளுபடி எனக் கூறி தொடர்ந்து கையேந்த வைக்கும் ஆட்சியாளர்களை நாம் தள்ளுபடி செய்ய வேண்டும். ஓரே நாடு,ஓரே ரேஷன்கார்டு, ஓரே ஜிஎஸ்டி, என கூறும் நீங்கள் உள்ளாட்சித் தேர்தலை கூட ஒரே நாளில் நடத்த முடிய வில்லை. என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். 

 

இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜெகதீஷ் பாண்டியன், அன்பு தென்னரசு, கதிர் ராஜேந்திரன், மாவட்ட  செயலாளர் சால்டின் சாமுவேல், மாவட்ட தலைவர் பிரகதீஸ்வரன், மாவட்ட பொருளாளர் குமரேசன் உள்ளிட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.