மஹாராஸ்டிர மாநிலத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வரும் நிலையில் மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சிவசேனா தலைமையிலான ஆட்சி மீது அதிருப்தி ஏற்பட்டு பாஜகவுடன் கூட்டணி வைக்க வலியுறுத்தி, சிவசேனா கட்சியின் மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 50க்கும் மேற்பட்ட எம் எல் ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்கள், தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்று கூறிவருவது உத்தவ் தாக்கரேவின் தலைமையிலான ஆட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் குஜராத்தில் இருந்த அதிருப்தி எம்எல்ஏக்கள், பின்னர் அஸ்ஸாமின் சூரத்தில் உள்ள சொகுசு விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.




உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள சிவசேனா கட்சியினர் மஹாராஸ்டிராவில் அங்கங்கே போராட்டத்தில் குதித்துள்ளனர். அதிருப்தி எம்எல்ஏ தனஜி சாவந்த்தின் கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். இதனால், மாநிலம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனிடையே, செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த சிவசேனா கட்சியின் முத்த தலைவர் சஞ்சய் ராவத், ”சிவசேனா தொண்டர்களின் கோப தீயை பற்றவைத்த பின் அதை அணைக்க முடியாது. சிவசேனா தொண்டர்கள் தெருக்களில் களமிறக்கப்படுவார்கள்” என்று எச்சரித்ததோடு, உத்தவ் தாக்கரே பதவியை ராஜினாமா செய்ய மாட்டார் சிவசேனா இறுதி வரை போராடும் என்று தெரிவித்திருந்தார்.




சிவசேனா கட்சியினர் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தானேவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவு ஜூன் 30 தேதி வரை இருக்கும் என்று தகவல்கள் வெளியானது. இதனையடுத்து தற்போது, தலைநகர் மும்பையில் 144- தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு ஜூலை 10 ஆம் தேதி வரை  அமலில் இருக்கும் என்று மும்பை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கூட்டங்கள், ஊர்வலங்கள், சுவரொட்டிகள் ஒட்ட தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சிவசேனா எம்.எல்.ஏக்கள், ஏக்னாத் ஷிண்டே இல்லம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.







16 அதிருப்தி எம் எல் ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் சிவசேனா பரிந்துரை செய்துள்ள நிலையில், தங்களது அதிருப்தி அணிக்கு சிவசேனா பால் தாக்கரே என்று ஏக்னாந்த் ஷிண்டே பெயர் வைத்துள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள உத்தவ் தாக்கரே, அவர்களின் விருப்பத்தில் நான் தலையிடவிரும்பவில்லை என்று கூறியுள்ள அவர் ஆனால் பால் தாக்கரேவின் பெயரை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று எச்சரித்துள்ளார்.