இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;


இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள வெளியுறவுத்துறை விரிசல் விவகாரம் அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் அங்கு நடத்தப்பட்டு வரும் அரசியல் கொலைகளைப் போன்று , பாஜக அரசுக்கு எதிராக தமிழகத்தில் எழும் குரல்களை அது போன்ற கொலை நடவடிக்கைகள் மூலம் அடக்க வேண்டும் என்றும் , குறிப்பாக பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் , மாணவர்கள் மீது கொலை தாக்குதல் நடத்த வேண்டும் என்கிற ரீதியில் , அதற்காக ஸ்கெட்ச் போட்டு தரப்படும் என்றும் , இதற்கு உதவ வேண்டும் என்கிற ரீதியில் , பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்தும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்  வெளிப்படையாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.


கோவை கலவர வழக்கில் தொடர்புடையவராக குற்றம் சாட்டப்பட்டவர். சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடர்ந்து நச்சுக் கருத்துக்களை விதைத்து வருபவர் , வன்முறையை தூண்டி வருபவர், தொலைக்காட்சி விவாதங்களில் கூட எதிர் கருத்துக்கள் பேசுவோரை பகிரங்கமாக மிரட்டியவர் என பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர் அர்ஜுன் சம்பத். இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக இதுவரை காவல்துறை நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. இப்படிப்பட்ட வன்முறை எண்ணம்  கொண்டவரை தான் பழனியில் நடைபெற்ற தமிழக அரசின் விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு அமைச்சர் சேகர்பாபு அவர் அருகில் அமர்ந்திருந்தார். வன்முறை வெறுப்பு சிந்தனை கொண்ட ஒருவருக்கு அரசு அளிக்கும் மரியாதையே, தங்களை காவல்துறையோ, அரசோ எதுவும் செய்யாது என்கிற தைரியத்தை அளித்து அவரை இதுபோன்று பகிரங்கமாக கொலை மிரட்டல் கொடுக்கும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இது மிகவும் ஆபத்தான போக்காகும்.


ஆகவே, தமிழக நலனுக்காக  போராடக் கூடியவர்களை, குரல் கொடுக்கக் கூடியவர்களை பயங்கரவாதிகளாக பாவித்து, அவர்களை கொலை செய்திட ஸ்கெட்ச் போட்டு தரப்படும் என்று பகிரங்கமாக கொலை திட்டத்தை பதிவிட்டுள்ள அர்ஜுன் சம்பத் மீது தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். எந்த ஒரு  நிகழ்வையும் மதவாத கண்ணோட்டத்தோடு அணுகும், தமிழகத்தின் அமைதியான சூழலை சீர்குலைக்க முயலும் அர்ஜுன் சம்பத் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.


அப்பாவி சிறுபான்மை முஸ்லிம் இளைஞர்களை முகநூல் பதிவுக்காக கூட யுஏபிஏ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து என்ஐஏ-விடம் ஒப்படைக்கும் தமிழக காவல்துறை, இதுபோன்ற பகிரங்கமாக வன்முறையை தூண்டும், கொலை மிரட்டல் விடுக்கும் அர்ஜுன் சம்பத் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது, அவர்கள் தொடர்ந்து அந்த குற்றத்தை செய்ய கூடுதல் உற்சாகத்தை அளிக்கின்றது.


பன்சாரா, கல்புர்க்கி, கௌரி லங்கேஷ் போன்ற சமூக செயற்பாட்டாளர்களும் பத்திரிகையாளர்களும் சங்பரிவாரத்தைச் சேர்ந்த மர்ம கும்பல்களால் கொலை செய்யப்பட்டது போன்று, தமிழகத்திலும் அது போன்றதொரு நிகழ்வை நடத்த வேண்டும் என்று வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ள  அர்ஜுன் சம்பத்தை கைது செய்ய அனைத்து ஜனநாயக சக்திகளும் குரல் கொடுக்க வேண்டும். பத்திரிக்கையாளர்கள், மாணவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு  தமிழக காவல்துறை உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.


இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.