வடகிழக்கு பருவமழை


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தமிழகம் முழுவதும் அக்டோபர் 1- ம் தேதி முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வந்த  நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் குறிப்பாக மாதவரம், ரெட்ஹில்ஸ், சோத்துப்பாக்கம், பாலவாயல், பெரம்பூர், கொளத்தூர், வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதனால் எதிர்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியது


அதிமுக - 53வது ஆண்டு 


அ.தி.மு.கவின் 53வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அக்கட்சியின் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் டாக்டர் சுனில் தலைமையில் கேரம் போர்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் 36 அணிகள் கலந்து கொண்ட நிலையில் இன்று சென்னை தி.நகரில் இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிமுகவின் மகளிர் அணி இணைச் செயலாளரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். 


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ; 


அதிமுகவின் திட்டங்களை பின்பற்றிய திமுக தற்பொழுது செயல்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட திட்டங்கள் திமுகவால் எந்த நிலையிலும் போட முடியாது. 


டீ வாங்கி கொடுத்து போட்டோ எடுப்பது மட்டும் வேலை இல்லை


கனமழை என ஊடகங்கள் மற்றும் திமுகவினர் மட்டும் தான் சொல்கிறார்கள். ஆனால் கள எதார்த்தம் அப்படி கிடையாது இரண்டு மணி நேரம் தான் கனமழை பெய்தது. அதைக் கூட இந்த மழை நீர் வடிகால்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. டீ வாங்கி கொடுத்து போட்டோ எடுப்பது மட்டும் வேலை இல்லை. 


திமுக மற்றும் பாஜக கள்ள உறவில் இருக்கிறார்கள் அதிமுகவில் பூசல் வரவேண்டும் என திமுக பாஜக இணைந்து ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா மூலமாக சூழ்ச்சி செய்கிறார்கள் என குற்றம் சாட்டினார். 


அண்ணாமலை ஓடிப்போனவர், அவரைப் பற்றி பேச எனக்கு விருப்பமில்லை அவரை ஒரு தலைவராகவே நான் என்றைக்கும் கருதியில்லை பாஜகவுடன் கூட்டணி இல்லை என தெளிவாக எடப்பாடி பழனிச்சாமி கூறிவிட்டார்" என்றார்