திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட வாணியம்பாடி அடுத்துள்ளது வளையாம்பட்டு கிராம ஊராட்சி. இந்த ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இவற்றுக்கு கடந்த அக்டோபர் மாதம் நடந்த ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் 2 வது கட்டமான 9-ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பெண்களுக்கு (தனி) ஒதுக்கப்பட்ட 8-வது வார்டில் போட்டியிட்ட பட்டியலின பெண் சோபியா நவீன் வெற்றி பெற்று உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.


அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஊராட்சி மன்ற துணை தலைவருக்காண தேர்தலில் போட்டியிட்ட 8-வது வார்டு உறுப்பினர் சோபிய நவீன்குமார் 12 உறுப்பினர்களில் 7 உறுப்பினர்களின் வாக்கை பெற்று துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் திடீரென நேற்று (டிச 17) தனது ஊராட்சி மன்ற துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, தனது ராஜினாமா கடித்ததை ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள வளர்ச்சிப்பணிகள் வட்டாட்சியரிடத்தில் கொடுத்துள்ளார். இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டியலினத்தை சேர்ந்த ஒரு பெண் ஊராட்சி மன்ற துணை தலைவர் திடீரென தனது துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்தது அதிகாரிகள் மற்றும் கிராம பொதுமக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.




பின்னர் செய்தியாளர்களை நேற்று (டிச 16) சந்தித்த சோபியா மற்றும் அவரது கணவர் நவீன் குமார் கூறுகையில், "நான் ஊராட்சி மன்ற துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்தே தொடர்ந்து என்னை ராஜினாமா செய்யச்சொல்லி சில வார்டு உறுப்பினர்கள் வற்புறுத்தினர். அதனால் நான் ராஜினாமா கடிதத்தை அதிகாரிகளிடம் அளித்துள்ளேன். மேலும் நான் பட்டியலினத்தை (SC) சேர்ந்த பெண் என்பதால் நான் துணைத்தலைவராக இருக்கக்கூடாது மாற்று சமுகத்தை சேர்ந்தவர்களே (வன்னியர்) அப்பதவியை அடைய வேண்டும் என என்னை ராஜினாமா செய்ய வைத்தனர் என சோபியா கூறினார்.


அவரது கணவர் நவீன் கூறும்போதும் நான் பட்டியலின பெண்ணான சோபியாவை திருமணம் செய்து கொண்டிருப்பதால் எங்களை ராஜினாமா செய்யச்சொல்லி வற்புறுத்தினர். சாதிதான் காரணம் அழுத்தம் தாங்க முடியாமல் நாங்கள் ராஜினாமா செய்து விட்டோம் என கூறினார். 




இது தொடர்பாக இன்று வளையாம்பாட்டு ஊராட்சி மன்ற துணை தலைவர் சோபியா நவீன் அவர்களை ABPnadu தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கேட்ட போது, "என்னை யாரும் வற்புறுத்தவில்லை, எனது குடும்ப சூழல் காரணமாக துணைத்தலைவர் பதவி பணியை மேற்கொள்ளமுடியவில்லை. இதனால் நானே முடிவு செய்துதான் இந்த முடிவை எடுத்துள்ளேன். மேலும் தற்போது தான் விசாரணைக்காக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று வந்தேன் அங்கேயும் இதனையே கூறியுள்ளேன்” என கூறினார். 




இது தொடர்பாக வளையாம்பாட்டு ஊராட்சி மன்ற தலைவர் திருப்பது என்பவரையும் ABPnadu தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கேட்டபோது, ”நான் கடந்த 5 நாட்களாக பயிற்சிக்காக கிருஷ்ணகிரியில் உள்ளேன். சோபியா நவீன் கொடுத்துள்ள ராஜினாமா கடிதம் குறித்து எதுவும் தெரியாது. ஆனால் நானோ அல்லது என் தரப்பில் இருந்தோ எந்தவித அழுத்தமும் தரவில்லை. ஊருக்கு சென்ற பிறகு இது குறித்து வார்டு உறுப்பினர் சோபியாவிடம் விசாரிக்கிறேன்” என கூறினார். 




ஒரு பட்டியலின பெண் ஊராட்சி  மன்ற துணைத்தலைவர் முதலில் சாதிய வற்புறுத்தலால் ராஜினாமா கடிதம் கொடுத்ததும், பின்னர் அதை மறுத்துதானே முன்வந்துதான் ராஜினாமா செய்கிறேன் என கூறுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.