ஜம்மு காஷ்மீரில் கடந்த 2018ஆம் ஆண்டு உச்சக்கட்ட அரசியல் பரபரப்பு நிலவி வந்தது. அந்த சமயத்தில், பிகார் மாநில ஆளுநராக பதவி வகித்து வந்த சத்தியபால்மாலிக்கை ஜம்மு காஷ்மீர் ஆளுநராக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நியமித்தது.
புல்வாமா தாக்குதல் குறித்து புயலை கிளப்பிய சத்யபால் மாலிக்:
இவர், ஆளுநராக பதவிவகித்தபோதுதான் ஜம்மு காஷ்மீர், பல்வேறு அரசியல் கொந்தளிப்புகளை எதிர்கொண்டது. குறிப்பாக, புல்வாமா தாக்குதல், சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, இணைய சேவை முடக்கப்பட்ட சம்பவங்கள் சத்யபால் மாலிக் ஆளுநராக பதவி வகித்தபோதுதான் நடந்தது.
பின்னர், ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு, யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதையடுத்து, கோவா மாநில ஆளுநராக சத்யபால்மாலிக் மாற்றப்பட்டார். கோவாவை தொடர்ந்து, கடந்த 2022ஆம் ஆண்டு வரை மேகாலயா ஆளுநராக பதவி வகித்து வந்தவர் சத்யபால் மாலிக்.
பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் ஜம்மு காஷ்மீரை கவனித்து கொள்ளும்படி, பிரதமர் மோடி அரசால் நியமிக்கப்பட்ட சத்யபால் மாலிக், மோடி அரசுக்கு எதிராகவே பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தியது தேசிய அரசியலை திருப்பிப்போட்டது.
குறிப்பாக, புல்வாமா தாக்குதலுக்கு மத்திய அரசே காரணம் என்றும் இதை தெரிந்து கொண்டு அமைதியாக இருக்கும்படி பிரதமர் மோடி தன்னிடம் சொன்னதாகவும் சத்யபால் மாலிக் பரபரப்பை கிளப்பினார். தேர்தல் நெருங்கும் சூழலில், பிரதமர் மோடி அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
"குழந்தைகளின் எதிர்காலம் இருண்டதாகிவிடும்"
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் குறிப்பிடுகையில், "2024இல் மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால், எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் இருண்டதாகிவிடும் என்பதை நான் உறுதியாகச் சொல்கிறேன்.
எனவே, இந்த முறை தேர்தலில் சாதி, மதத்தை ஒதுக்கிவிட்டு பாஜகவுக்கு எதிராக வாக்களித்து பாஜகவை மோசமாக தோற்கடிக்க வேண்டும் என்று நாட்டுமக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். ஆட்சியில் இருப்பவர்கள் நாட்டைப் பாழ்படுத்துவதில் ஈடுபட்டுள்ளனர்.
முழு நாடும் ஒரு சில முதலாளிகளால் சூறையாடப்படுகிறது. இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்கொள்கிறார்கள். பணவீக்கம் விண்ணை முட்டுகிறது. அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு பள்ளிகளை மூடுவதில் மோடி அரசு குறியாக உள்ளது.
உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும், பணவீக்கத்தில் இருந்து விடுபட வேண்டும், நல்ல வேலைவாய்ப்பு வேண்டும், இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும் என விரும்பினால், இந்த மோடி அரசை ஆட்சியில் இருந்து தூக்கி எறியுங்கள். இந்த வாய்ப்பை இந்த முறை தவறவிட்டால் அடுத்தமுறை வாக்களிப்பதற்கான வாய்ப்பே உங்களுக்கு கிடைக்காது" என பதிவிட்டுள்ளார்.