சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அரசியல் சுற்றுப்பயணத்தில் சசிகலா சென்று கட்சி தொண்டர்களை சந்தித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக தாதகாப்பட்டி பகுதியில் சசிகலாவின் அரசியல் சுற்றுப்பயணத்தில் மக்களை சந்தித்து, மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்பொழுது அவர் பேசியது, எம்ஜிஆர், ஜெயலலிதா பொதுமக்களுக்காக எண்ணற்ற மக்கள் நலதிட்டங்களை நிறைவேற்றி உள்ளனர். ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை மூடும் நடவடிக்கையில் திமுக ஈடுபட்டு வருகிறது. இதனை யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள், வாக்களித்த மக்களுக்கு இழைக்கப்படும் அநிதியாகும். மேலும் திமுக தேர்தல் வாக்குறுதிகளுக்கு கொடுக்கப்பட்டதை நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார்கள். இதில் ஏராளமான திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது என்று என்னை சந்திக்கும் பொதுமக்கள் கூறி வருகின்றனர். திமுகவை நம்பி வாக்களித்த நிலையில் தற்போது ஏமாந்துவிட்டதாக பொதுமக்கள் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிமுக தான் உண்மையான மக்கள் இயக்கம் என்றும் பேசினார்.



எத்தனையோ கழகத் தொண்டர்கள் இன்னுயிரை தியாகம் செய்து அதிமுகவை காப்பாற்றியுள்ளனர். அவர்களின் தியாகத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் ஒவ்வொருவருடைய செயல்பாடு இருக்க வேண்டும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். எந்தஒரு வேற்றுமை இருந்தாலும் அவற்றை கண்டிப்பாக சரிசெய்து எல்லோரையும் அரவணைத்து வலிமைமிக்க பேரியக்கமாக மாற்றும் வரை நான் ஓயப் போவதில்லை, இதுகண்டிப்பாக நடந்தே தீரும் ,தன்னலமற்ற தொண்டர்கள் இருக்கும்வரை எந்த ஒரு சூழ்ச்சி செய்தாலும் பேரியக்கமாக மாற்றுவதை யாராலும் தடுக்க முடியாது.


எந்த ஒரு இயக்கமும் இதுபோன்ற சோதனைகளை சந்தித்து மீண்டதாக சரித்திரம் கிடையாது. ஆனால் நம்மால் அனைத்தையும் முறியடித்து வெற்றி காண முடிந்தது அன்று எவ்வாறு சாதிக்க முடிந்தது என்பதை சிந்தித்துப் பார்த்தால் இன்றைய பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் எனவும் கூறினார். இயக்கத்தின் நலன்கருதி ஒருதாய் பிள்ளைகளாக ஒன்றிணைவோம் எதிரிகளை வென்றிடுவோம் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுகவை கொங்கு நாடு மக்களையும் யாராலும் பிரித்துப் பார்க்க முடியாது, அம்மாவின் மறைவிற்குப் பிறகு ஆட்சியை காப்பாற்ற உங்கள் பகுதியை சேர்ந்த கழக நிர்வாகியை தமிழகத்தின் முதல்வராக ஆக்கினேன். எந்த ஒரு பிரதிபலினையும் எதிர்பார்க்காமல் இயக்கத்தின் நலன்கருதி எனது உண்மையான பங்களிப்பு எந்நாளும் அளித்திருக்கிறேன் என்ற மனநிலை என்னிடம் உள்ளது. எனவே எந்த ஒரு சோதனைகள் நம் இயக்கத்திற்கு ஏற்பட்டாலும் அவற்றையெல்லாம் முறியடித்து எம்ஜிஆர், ஜெயலலிதா எண்ணங்களை ஈடேற்றும் வகையில் கழகத்தை வலுப்படுத்தும் வகையில் யாராலும் அசைத்து பார்க்க முடியாத பேரியக்கமாக மீண்டும் கொண்டு வருவோம். அனைவரும் பார்க்கதான் போகிறீர்கள் என்பது தெரிவித்துக் கொள்கிறேன். கழகத் தொண்டர்கள்  இன்றைய எதார்த்த நிலையை புரிந்துகொண்டு அனைவரும் ஒன்று சேர்ந்தால் கண்டிப்பாக நம்மால் வெற்றியை பெறமுடியும் என்றார்.



தமிழக மக்களின் ஆதரவை பெற்று ஆட்சியமைத்து மக்கள் நல திட்டங்களை நிறைவேற்ற முடியும் நம்முடைய சிந்தனைகள் எல்லாம் தொண்டர்களின் நலனை கருதி அனைவரையும் அரவணைத்து இயக்கத்தை வலுப்படுத்துவது மிக அவசியமாக உள்ளது. எனவே நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற அண்ணாவை காட்டிய வழியில் கழகத்தினர் அனைவரையும் ஏற்றுக்கொண்டு ஒற்றுமையாக பயணிப்போம் என்பதை அனைவருக்கும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்து அமையபோவது அதிமுக ஆட்சி தான் இந்த மக்களுக்கான ஆட்சியாக இருக்கும். ஏழை, எளிய சாமானிய மக்களுக்கான ஆட்சியாக அமையும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் பேசினார்.