சசிகலாவுக்கு எதிராகத் தமிழ்நாட்டில் எதிர்ப்பலைகள் தொடர்ந்து கிளம்பிவருகின்றன. கோடநாடு கொலை வழக்கில் தொடர்ந்து பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இந்த வழக்கு விசாரணையில் கோடநாடு பங்களா பங்குதாரர்களில் ஒருவரான சசிகலாவும் எந்நேரமும் இணைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே சசிகலாவுக்குச் சொந்தமான பையனூர் பங்களா வாசலில் நோட்டீஸ் ஒட்டி சொத்தை முடக்கியுள்ளதாக வருமானவரித்துறை அறிவித்துள்ளது. சர்ச்சைக்குப் பெயர்போன சசிகலாவின் சொத்துகள் பட்டியலில் பையனூர் பங்களாவும் விதிவிலக்கல்ல.
பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கும் பையனூர் பங்களா சசிகலாவிடம் கைமாறுவதற்கு முன்பு அது இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் கங்கை அமரனின் சொத்தாக இருந்தது. அமரன் பாடல் எழுதவும் இசையமைப்பதற்கும் என்றே ஆசை ஆசையாக உருவாக்கிய பண்ணைவீடு அது. பண்ணைவீட்டின் அழகு ஜெயலலிதாவைக் கவர்ந்தது. ’அம்மாவுக்கு உங்க பண்ணைவீடு பிடிச்சிருக்காம்’ என்று தொடங்கிதான் அமரனிடம் பங்களாவை விற்க பேரம் பேசியுள்ளார் சசிகலா. இது நடந்தது 1994ல். சசிகலாவின் அக்கா மகன் பாஸ்கரன் தான் அமரனை போயஸ் கார்டன் அழைத்திருக்கிறார். அங்கே சசிகலாவை சந்தித்திருக்கிறார் கங்கை அமரன்.அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அந்த பண்ணைவீட்டை வாங்க ஆர்வமுடன் இருப்பதாக சசிகலா கூறியுள்ளார். வீட்டை விற்க அமரன் மறுத்துள்ளார்.
ஆனால் அமரன் மறுத்ததோடு அந்த விவகாரம் முடியவில்லை. அதன் பிறகு சுதாகரன் தொடர்ச்சியாக அமரனுக்கு தினமும் போன் செய்து பேசியிருக்கிறார். அதற்கும் மசியாத நிலையில் அமரன் வீட்டுக்கு தினமும் அட்டெண்டண்ட்ஸ் போட்டுள்ளார் சுதாகரன்.ஒருகட்டத்தில் சுதாகரனின் அழுத்தம் தாங்காமல் அக்டோபர் 1994ல் தனது வீட்டை சசிகலாவுக்கு விற்றுள்ளார் அமரன். விற்றதற்கு 13.1 லட்ச ரூபாய்க்கான இரண்டு டிடிக்களை சுதாகரன் தரப்பு வழங்கியுள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம் 2017ல் தர்மயுத்தம் அறிவித்தபோது அவரோடு சேர்ந்து அமரனும் சசிகலாவுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். ’சசிகலா என்னைப் போன்ற வி.ஐ.பிக்களுக்கே இவ்வளவு அழுத்தம் கொடுப்பார் என்றால் சாதாரண மக்களுக்கு எவ்வளவு அழுத்தம் கொடுத்திருப்பார் என்பதை நினைத்துக் கூடப் பார்க்கமுடியவில்லை. எனக்கு நேர்ந்ததற்கு சசிகலாதான் காரணம். அவரை சும்மா விடக்கூடாது. என் கழுத்தை அறுத்தாலும் பரவாயில்லை நான் உண்மையைச் சொல்வேன்’ எனக் காரசாரமாக அப்போது பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்தார் அமரன்.
இன்றைய தேதியில் சுமார் 100 கோடி மதிப்புள்ள பங்களாவைதான் அன்று வெறும் 13.1 லட்ச ரூபாய்க்கு எழுதி வாங்கினார் சசிகலா. 2017 முதலே அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.அதன் ஒருகட்டமாகத்தான் தற்போது இந்த பையனூர் பங்களாவை முடக்கியுள்ளனர் வருமானவரித்துறையினர்.