சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. இது அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில், அ.தி.மு.க.வின் பிரிந்துள்ள தலைவர்களை ஒருங்கிணைக்க முன்னாள் நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில், சென்னை போயஸ் கார்டனில் நிருபர்களை சசிகலா சந்தித்தார்.
என் என்ட்ரி ஆரம்பம்
அப்போது, "அவர், அ.தி.மு.க. 3வது மற்றும் 4வது இடத்திற்கு சென்றதற்கு யார் காரணம்? அ.தி.மு.க. முடிந்துவிட்டது என நினைக்க வேண்டாம். என்னுடைய என்ட்ரி ஆரம்பித்து விட்டது. 2026ல் அ.தி.மு.க. தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை அமைக்கும். பட்டிதொட்டியெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திப்பேன்" என்றார். மேலும், அதிமுகவில் சாதி வந்துவிட்டது. தானும் கெட்டு கட்சியையும் கெடுக்கக்கூடாது எனவும் அதிமுக நிர்வாகிகளை மறைமுகமாக சாடினார் சசிகலா.
தமிழ்நாட்டை தி.மு.க.விற்கு அடுத்தபடியாக அதிக ஆண்டுகள் ஆண்ட கட்சி என்ற பெருமையை கொண்ட கட்சி அ.தி.மு.க. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க. பெரும் சிக்கல்களை எதிர்கொண்டது. இருப்பினும், கடந்த ஆட்சியை எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. முழுமையாக நிறைவு செய்தது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
கடந்த சட்டமன்ற தேர்தல் முதல் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவுகளும், மோதல்களும் என அடுத்தடுத்த சம்பவங்களுக்கு பிறகு பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானார். எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு அ.தி.மு.க. சந்தித்த அத்தனை தேர்தல்களும் தோல்வியை சந்தித்தது. இந்த சூழலில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அ.தி.மு.க. அதிரடியாக அறிவித்துள்ளது.
அ.தி.மு.க.வின் இந்த அறிவிப்பு அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில்தான் சசிகலா அ.தி.மு.க.விற்காக பட்டிதொட்டியெங்கும் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்திப்பேன் என்று அறிவித்துள்ளார்.
சசிகலா சுற்றுப்பயணம் எப்போது?
அ.தி.மு.க.வின் முக்கியமான ஒருவராகவும், தென் தமிழகத்தில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராகவும் சசிகலா. முன்னாள் முதலமைச்சரும், ஜெயலலிதாவின் விசுவாசியாகவும் கருதப்படுபவர் ஓ.பன்னீர்செல்வம். இவர்கள் இருவரும் தற்போது அ.தி.மு.க.வில் இல்லாதது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. சசிகலாவிற்கு பக்கபலமாக இருந்த தினகரன் அ.ம.மு.க. என்று தனிக்கட்சியைத் தொடங்கிவிட்டார்.
இந்த சூழலில், அ.தி.மு.க. மீண்டும் பலம்பெற எடப்பாடி பழனிசாமி. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகியோர் இணைய வேண்டும் என்று அக்கட்சியின் தொண்டர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். சசிகலா பட்டி தொட்டியெங்கும் சென்று மக்களைச் சந்திப்பேன் என்று கூறியிருப்பதால், அவர் விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பது தெரியவந்துள்ளது. அவரது பயணம் எப்போது? என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
இபிஎஸ் பதிலடி
இந்தநிலையில் எடப்பாடி கே பழனிச்சாமி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அப்பொழுது செய்தியாளர்கள் சந்திப்பை எடப்பாடி பழனிச்சாமி தவிர்த்தார். அப்பொழுது செய்தியாளர்கள் அதிமுகவில் சாதி அரசியல் நடைபெறுகிறது என சசிகலா , குற்றச்சாட்டை முன்வைத்து தொடர்பாக கேள்வி எழுப்பினர். இதுகுறித்து பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவிற்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் என தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றார். சசிகலா குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி அளித்திருக்கும் பதில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.