கடந்த 24ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட சச்சரவின் தாக்கம் இன்னும் அடங்காதநிலையில், மீண்டும் அந்த பிரச்னைக்கு திரிகொளுத்தியிருக்கிறார் அக்கட்சியின் முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா.
கூட்டம் நடைபெறும்போதே அன்வர்ராஜாவை சிவி சண்முகம் அடிக்க பாய்ந்தார் என்ற தகவல் வந்த நிலையில், அப்படி நடந்தது உண்மைதான் என ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ தொலைக்காட்சிக்கு அளித்திருக்கும் நேர்காணலில் போட்டு உடைத்திருக்கிறார் அன்வர்ராஜா.
தான் எடப்பாடி பழனிசாமியை அவன், இவன் என ஒருமையில் பேசிய ஆடியோ வெளியானதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான், சிவி சண்முகம் உள்ளிட்டோர் எழுந்து சத்தம் போட்டு, நான் பேசக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கம்தான் சமாதானம் செய்து வைத்தார் என்று அந்த நேர்காணலில் கூறியிருக்கும் அன்வர்ராஜா. எடப்பாடி பழனிசாமியை தான் ஒருமையில் பேசியது உண்மைதான் என ஒப்புக்கொண்டிருக்கிறார்.
அதுமட்டுமின்றி, சசிகலா எங்களுக்கு எப்போதுமே சின்னமாதான் என்றும் அதிமுகவில் இப்போது இருக்கும் அத்தனை தலைவர்களும் அவரது காலில் விழுந்து கிடந்தவர்கள்தானே எனவும் ஆவேசமாக பேட்டி அளித்துள்ள அன்வராஜா, சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்திருக்கும் அன்வர் ராஜா, அவர்களோடு கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்று நான் எவ்வளோ சொல்லியும் கேட்காமல் கூட்டணி போட்டதால்தான், இந்த அளவுக்கு அதிமுக தோல்வியை சந்தித்திருக்கிறது என வெடித்து பேசியிருக்கிறார்.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய ஒபிஎஸ், நான் சசிகலாவை கட்சியில் சேர்த்துக்கொள்வது குறித்து கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் கூடி முடிவு எடுப்பார்கள் என்று பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயக்குமார் அளித்த பேட்டி, தன்னை மிகவும் வருந்த செய்தது என்றும் பேசினார் என அன்வர்ராஜா தெரிவித்துள்ளார்.
ஆனால், நடந்து முடிந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சசிகலா பற்றியோ அல்லது ஒற்றைத் தலைமை குறித்து ஒருவரும் வாய்த் திறக்காமல் இருந்ததாகவும், செங்கோட்டையன் மட்டுமே வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுத்து, எண்ணிக்கையையும் 11லிருந்து 18 ஆக உயர்த்த வேண்டும் என்று பேசினார் எனவும் அன்வர்ராஜ தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில், அதிமுக தலைமையை குறிப்பாக எடப்பாடி பழனிசாமியை தான் ஒருமையில் பேசியது உண்மைதான், சசிகலா எங்களுக்கு எப்போதும் சின்னமாதான், சிவி சண்முகம் தன்னை தாக்க முயன்று கைகளை உயர்த்தியது உண்மை, ஜெயக்குமார் குறித்து ஓபிஎஸ் வருந்தினார் என இந்த நேர்காணலில் வெளிப்படையாக பேசியுள்ளார் அன்வர்ராஜா. தொடர்ந்து இப்படி அன்வர்ராஜா வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று பேசிவருவதால் அதிருப்தியில் இருக்கும் அதிமுக தலைமை அவர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்கின்றார்கள் விவரம் அறிந்தவர்கள்