ஒபிஎஸ் அவராகத்தான் விலகிப்போய் தர்மயுத்தம் செய்தார், அவர் அப்படி செய்யவில்லையென்றால் நான் சிறைக்கு சென்றபோது அவரைதான் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு போய் இருப்பேன் என பேசி மீண்டும் அதிமுவில் அனல் கிளப்பியிருக்கிறார் சசிகலா.


ஒபிஎஸ் மட்டும் அன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால் உங்களை சிறைக்கு செல்லவிடாமல் கூட தடுத்து நிறுத்தியிருப்பார். நீங்களும் அவரும் இணைந்து கட்சியை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்று பேசிய தேனியை சேர்ந்த சிவநேசன் என்பவரிடம், ’அவராகத்தான் சென்றார், நான் ஒன்றுமே சொல்லவில்லை’ என்று சொன்னதோடு, அவர் எங்களிடமே இருந்திருந்தால் அவரைத்தான் முதல்வராக ஆக்கியிருப்பேன் எனவும் பேசியுள்ளார்.


சசிகலாவிடம் தொலைபேசி மூலமாக பேசிய முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உள்பட 16 பேரை அதிமுகவில் இருந்து நீக்கி நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், என்னுடன் பேசியவர்களை நீக்கியது வருத்தமளிக்கிறது என்றும், எதிர்கட்சியாக இருக்கும்போது எப்படி செயல்படவேண்டும் என்று கூட தெரியாமல் இருக்கிறார்கள் என்றும், இன்று மட்டும் 10 பேரிடம் பேசி ஆடியோ வெளியிட்டுள்ள சசிகலா. இதுவரை மொத்தமாக 50 ஆடியோக்களை வெளியிட்டுள்ளார்.


ஒவ்வொரு ஆடியோவிலும் நான் நிச்சயமாக வந்துவிடுவேன் என்றும், கட்சியை கைப்பற்றி, ஜெயலலலிதாபோல் வழிநடத்துவேன் என்றும் மீண்டும் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்வேன் என்றும் தொடர்ந்து பதிவு செய்துக்கொண்டே இருந்த சசிகலா, தனது 23 ஆடியோவில் காரைக்குடியை சேர்ந்த பிரபாகரன் என்பவரிடம் பேசியபோதுதான் அதிமுக என்ற வார்த்தையை பயன்படுத்தினார், அதற்கு முன்னர் பேசிய 22 ஆடியோக்களிலும் கட்சி என்று மட்டுமே குறிப்பிட்டு வந்தார். அதன்பிறகு இன்று அவர் தரப்பு வெளியிட்டுள்ள 44வது ஆடியோவில் ஒபிஎஸ் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.


சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை முடிந்து, பெங்களூரில் இருந்து கிளம்பிய சசிகலா, வழிநெடுகிலும் தொண்டர்கள் அளித்த பிரம்மாண்ட வரவேற்புகளோடு சென்னை வந்து சேர கிட்டத்தட்ட ஒரு நாள் ஆனது. அதன்பிறகு, கட்சியை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பார் என்று பலரும் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், எந்த நகர்வுகளையும் மேற்கொள்ளாமல் பல நாள் அமைதி காத்தார். திடீரென சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக மார்ச் 3, 2021ஆம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டு, மீண்டும் அம்மா ஆட்சி அமைய நான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க முடிவெடுத்து இருக்கிறேன் என அறிவித்தார். அதன்படி, அரசியலில் இருந்து விலகி இருந்த சசிகலா, தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததும், மீண்டும் கட்சியை கைப்பற்றும் நோக்கில் தற்போது தொண்டர்களிடம் தொலைபேசி மூலம் பேசத் தொடங்கியிருக்கிறார்.


தன்னை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா தொடர்ந்த வழக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வரும் 18ஆம் தேதி விசாரணைக்கு வரும் நிலையில், அந்த வழக்கு தனக்கு சாதகமாக முடியும் என்ற நம்பிக்கையில் தொண்ர்களிடம் பேசுவதை மேலும் துரிதப்படுத்தியிருக்கிறார் சசிகலா.