234 தொகுதிகளை கொண்ட தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஆகும் கனவில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நிலையில், மிக குறைந்த தொகுதிகளை மட்டுமே கொண்ட புதுச்சேரியில் எளிதாக முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கவிருக்கிறார் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ்


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூனா இருந்து வரும் நிலையில், தொழில் போட்டிகளை சமாளிக்க, அரசியல் செல்வாக்கு வேண்டும் என்பதால்,  தன்னுடைய மகனையே முதலமைச்சர் ஆக்கிவிடும் பெரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் மார்ட்டின்.




பாஜக எம்.எல்.ஏ நலத் திட்ட விழாவில் தலைமை தாங்கிய சார்லஸ்


சமீபத்தில் புதுச்சேரி காமராஜர் நகரில் அந்த தொகுதி பாஜக எம்.எல்.ஏ ஜான்குமார் மாணவர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவை அறிவித்தார். முதல்வர் ரங்கசாமியையோ அல்லது அமைச்சர் நமச்சிவாயத்தையோ தலைமைத் தாங்க அவர் அழைத்து வருவார் என்று பார்த்தால், அரசியலுக்கு பழக்கப்படாத புது முகமான லாட்டரி மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லசை மேடையில் ஏற்றி, அவர்தான் விழா தலைமை என்று அறிவித்தார் ஜான்குமார்.  யார் இவர் ? என்ன ஏது என்று தெரிவதற்குள் சார்லஸே மாணவ, மாணவிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.


சிறியவர் என்றும் பாராமல் சார்லஸ் காலில் விழுந்த எம்.எல்.ஏ


இந்நிலையில், சார்லஸ் நலத் திட்ட உதவிகளை வழங்கிக்கொண்டிருக்கும்போதே அவர் அருகே நின்ற முன்னாள் அமைச்சரும் பாஜக ஆதரவு எம்.எல்.ஏவுமான அங்காளனன் சார்லஸ் காலில் தொபுக்கடி என விழுந்து ஆசி பெற்றார். வயதில் சிறியவரான சார்லஸ் காலில் அங்காளனன் விழுந்ததை அவரை கூட்டிக் கொண்டுவந்த ஜான்குமார் உள்ளிட்ட எம்.எல்.ஏக்களே எதிர்பார்க்கவில்லை.


புதுச்சேரியின் புதிய அரசியல் அடையாளமாக ஜோஸ் சார்லஸ் உருவாகிவிடுவார் என்று முன்கூட்டியே துண்டைப்போடுவது மாதிரி, காலில் விழுந்து சார்லஸ் கவனத்தை ஈர்த்திருக்கிறார் அங்காளனன்.


ஜான்குமாருக்கு மார்டின் கொடுத்த் அசைன்மெண்ட்


முன்னாள் அமைச்சர், வயதில் மூத்தவர், சிட்டிங் எம்.எல்.ஏ என எக்கச்சக்க மதிப்புகளை வைத்திருக்கும் அங்காளனே, சார்லஸ் காலில் விழுந்துவிட்ட பிறகு, இனி மற்ற அனைவரும் இதே பாணியை பின்பற்றத் தொடங்கவிடுவர் என்பதுதான் பாஜக எம்.எல்.ஏவான ஜான்குமாரின் கணக்கு. ஏனென்றால், தன் மகனை புதுச்சேரியில் முதலமைச்சராக ஒருநாள் ஆக்கிவிட வேண்டும் என்ற ஆசையில் லாட்டரி மார்ட்டின் அந்த அசைன்மெண்டை கொடுத்தது பாஜக எம்.எல்.ஏ ஜான்குமாரிடம்தான்.


அதற்கு காரணமும் இருக்கிறது. புதுச்சேரியில் லாட்டரி புழக்கத்தில் இருந்தப்போது அந்த தொழிலில் அங்கு கொடிக்கட்டி பறந்தவர் ஜான்குமார். அவருக்கு ஆஸ்தான குருதான் இந்த லாட்டரி மார்ட்டின். குரு கொடுத்த அசைன்மெண்டை கச்சிதமாக செய்து முடிக்க்கும் வேலைகளில் இறங்கியிருக்கும் ஜான்குமார், வரும் 2026 தேர்தலில் தன்னுடையை காமராஜர் நகர் தொகுதியையே மார்ட்டினின் மகன் சார்லஸ்க்கு விட்டுக் கொடுக்கவிருக்கிறார் என்பதுதான் ஹைலைட்.


பாஜக-வில் இணைகிறாரா சார்லஸ் ?


முதலமைச்சர் ஆக வேண்டுமென்றால் முதலில் நேரடி அரசியலுக்கு வரவேண்டும், அரசியலுக்கு வர வேண்டுமென்றால் ஏதேனும் ஒரு கட்சியில் இணைய வேண்டும். அந்த கட்சி பாஜக தானா ? என்ற கேள்விக்கு இன்னும் சில நாட்களில் விடை கிடைத்தும்விடும் என்கிறார்கள் ஜான்குமாரின் ஆதரவாளர்கள்.


தனக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்படவில்லை, வாரிய பதவியும் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இருக்கும் ஜான்குமார், பத்தும் செய்யும் பணத்தை, கோடி, கோடியாக வைத்திருக்கும் மார்ட்டினின் மகனை வைத்து, புதுச்சேரியின் புதிய அரசியலுக்கு அடித்தளம் போட காய்நகர்த்தியிருக்கிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.


பணம் பத்தும் செய்யும்தான். ஆனால், வெறும் பண பலத்தால் மட்டுமே முதலமைச்சர் பதவியை பெற்றுவிட முடியுமா? என்பதுதான் இப்போது மார்ட்டினின் மகன் சார்லஸை சுற்றியிருக்கும் மில்லியன் டாலர் கேள்வி.