சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற இயல்பு கூட்டம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. முன்னதாக, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு பெண் மாமன்ற உறுப்பினர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். பின்னர் ரோமன் என்ற கூட்டம் தொடங்கியது, இதில் மாநகராட்சி மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி தனது உரையை துவங்கினார். அப்போது சேலம் மாநகராட்சி பேட்டரி வாகனங்கள் தனியாருக்கு டெண்டர் வழங்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பேசினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் மாநகராட்சிக்கு வாங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் அனைத்தும் கடந்த ஆட்சியில் வாங்கப்பட்டது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் திமுக அதிமுக கவுன்சிலர் வாக்குவாதம் ஏற்பட்டது. 



இதைதொடர்ந்து பேசிய அதிமுக கவுன்சிலர் யாதவமூர்த்தி அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம், பத்து ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில் திட்டம், அம்மா உணவகம் உள்ளிட்ட திட்டங்கள் நிறுத்தப்பட்டதாக பேசிய நிலையில் திமுக கவுன்சிலர்கள் எழுந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மிக மோசமான திட்டம் என்று அதிமுக கவுன்சிலர்கள் கூறியதற்கு ஐந்து கவுன்சிலர்கள் சுற்றி வளைத்துக் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடிக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அதிமுக கவுன்சிலர் யாதவமூர்த்தி மாமன்ற கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்வதாக கூறிக்கொண்டு அதிமுக கவுன்சிலர்கள் வெளியேறினர். இதனால் சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மிகவும் பரபரப்பாக காட்சியளித்தது.


அப்போது செய்தியாளர்களை சந்தித்த மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி போல் நிறைவேற்றவில்லை என்றும், குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார். மேலும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம், முதியோர் உதவித்தொகை, மடிக்கணினி திட்டம், அம்மா உணவகம் திட்டம் ஆகியவற்றை எல்லாம் திமுக அரசு முடக்கி விட்டதாக குற்றம்சாட்டினார். மேலும் சொத்து வரி ஏற்கனவே உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் அளவீடு செய்து கூடுதல் வரி விதிக்கப்படுவதாகவும் இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். சேலம் மாநகராட்சி பகுதிகளில் குப்பை கழிவுகளை சேகரிக்கும் பணிக்கு தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது என்றும், இந்த டெண்டரில் மாநகராட்சிக்கு சொந்தமான வாகனங்கள் அடிமாட்டு விலைக்கு குத்தகை விடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகராட்சி நிதி வருடத்திற்கு 80 கோடி ரூபாய் வீணாகி உள்ளது என்றார்.



முன்னதாக சேலம் மாமன்ற கூட்டத்திற்கு வந்த விசிக மாமன்ற உறுப்பினர் இமயவரம்பன், தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை கோவைக்கு நிகராக வழங்க வேண்டும் என குறிப்பு பலகையோடு மாமன்றத்திற்கு வருகை தந்தார். மாமன்ற கூட்டத்தில் பேசிய அவர், கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியமாக 700 ரூபாய்க்கு மேல் வழங்கப்படுகிறது. ஆனால் சேலம் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு 300 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே கோவைக்கு நிகராக உள்ள சேலம் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கும் அதே அளவு ஊதியம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.