PM Modi Foreign Visit Expenditure: பிரதமர் மோடியின் 5 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்திற்கே, 67 கோடி ரூபாய் செலவானதாக அரசு ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம்:

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் உறவுகளை வலுப்படுத்தும் விதமாக, பிரதமர் மோடி தொடர்ந்து சர்வதேச நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்கு ஏற்பட்ட செலவு தொடர்பான விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்திற்காக ரூ.67 கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட்டதாகவும், 2021 முதல் 2024 வரையிலான அவரது வெளிநாட்டுப் பயணங்களுக்காக கிட்டத்தட்ட ரூ.295 கோடி செலவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கில் வராத செலவுகள்

மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரெக் ஓ'பிரையன் எழுப்பிய கேள்விக்கு, வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்துப்பூர்வ பதிலளித்தார். அதில் "செலவு கணக்குகள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன. மொத்த செலவு இன்னும் கிடைக்கவில்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கூறப்பட்டுள்ளது.

நாடு வாரியாகவும், ஆண்டு வாரியாகவும் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இந்த ஆண்டு பிரதமர் மோடி சென்ற மொரீஷியஸ், சைப்ரஸ், கனடா, குரோஷியா, கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுக்கான பயணங்கள் தொடர்புடைய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

எந்த நாட்டிற்கு அதிக செலவு?

இந்தப் பயணங்களில் மிகவும் விலையுயர்ந்ததாக, ஃப்ரான்ஸ் பயணத்திற்கு ரூ.25 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஜூன் 2023 இல் பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு மேற்கொண்ட பயணத்திற்கு ரூ.22 கோடிக்கும் அதிகமாக செலவாகியுள்ளது. மே 2022 முதல் டிசம்பர் 2024 வரை பிரதமர் மோடியின் 38 வெளிநாட்டுப் பயணங்களுக்காக கிட்டத்தட்ட ரூ.258 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில், பிரதமர் மோடி பிப்ரவரி 10-13 வரை பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கு பயணம் செய்தார். பாரிஸில், அவர் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார். தொடர்ந்து அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார், 

2025ல் இவ்வளவு செலவா?

பகிரப்பட்ட தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி பயணம் செய்த 5 நாடுகளுக்கான செலவினங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

  • ஃப்ரான்ஸ் - ரூ.25,59,82,902 
  • அமெரிக்கா - ரூ.16,54,84,302 
  • தாய்லாந்து - ரூ.4,92,81,208
  • இலங்கை - ரூ.4,46,21,690 
  • சவுதி அரேபியா - ரூ.15,54,03,792.47

4 ஆண்டுகளுக்கான செலவு விவரங்கள்:

2024ம் ஆண்டில் ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா மற்றும் பிரேசில் உள்ளிட்ட 16 நாடுகளுக்கு மேற்கொண்ட சுற்றுப்பயணத்திற்கு சுமார் ரூ.109 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2023ம் ஆண்ட் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு பயணங்களுக்கு கிட்டத்தட்ட 93 கோடி ரூபாயும், 2022ம் ஆண்டிற்கு ரூ.55.82 கோடியும், 2021ம் ஆண்டு வெளிநாட்டு பயனங்களுக்கு சுமார் ரூ.36 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக  அமெரிக்கா பயணத்திற்கு ரூ. 19.63 கோடி செலவிடப்பட்டுள்ளது. இத்தாலிக்கு ரூ. 6.9 கோடியும், இங்கிலாந்திற்கு ரூ. 8.57 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

இதர செலவுகள்:

பொதுமக்களுன் கலந்துரையாடும் நிகழ்ச்சிகள், பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் ஈடுபாடுகளின் விளம்பரம் மற்றும் ஒளிபரப்புக்கான செலவுகள் தொடர்பான விவரங்கள் தனியாக பட்டியலிடப்பட்டுள்ளன. உதாரணமாக பிரதமர் மோடியின் 2023 எகிப்து பயணத்திற்காக, விளம்பரம் மற்றும் ஒளிபரப்புக்கான செலவு ரூ.11.90 லட்சம் என்று தரவுகள் தெரிவிக்கின்றன