சமீபகாலமாக தமிழக அரசியலில் பாமகவில் உள்கட்சி பூசலை தாண்டி பூகம்பமே வெடித்துக்கொண்டிருக்கிறது. முன்பொரு காலத்தில் சின்ன அய்யா, பெரிய அய்யா என்றால் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். தற்போது சின்னவர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஒரே ஒரு அய்யா தான் நான் மட்டும் தான் என்ற பாணியில் பாமக நிறுவனர் ராமதாஸ் பாமகவை டேக் ஓவர் செய்து வருகிறார். பாமகவில் அப்பாவுக்கும், மகனுக்கும் பனிப்போர் நடந்து வருகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாமக டிராமா என்று பலரும் விமர்சித்தாலும், நடப்பதை பார்த்தால் அப்படி இல்லை என்றே மூத்த அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றனர். 

குறிப்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி மீது வைக்கப்படும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளும் காரணமாக அமைகிறது. அதைத்தொடர்ந்து அவரது வீட்டில் வைக்கப்பட்ட ஒட்டு கேட்பு கருவி இருந்ததாகக் கூறப்படும் தகவலும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து தன் பக்க நியாயங்களையும் அனுபவ பூர்வமாக எடுத்துக் கூறி வருகிறார். மேலும், பாமகவின் பெயர், கொடியை தன்னை தவிர வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாமக தலைமையகம் சென்னையில் இருந்து விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது. 

இனி வேறு எங்கும் பாமக தலைமையகம் இல்லை, இதனை மீறி செயல்பட்டால் அது சட்டத்திற்கு புறம்பானது என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார். இப்படி ஒவ்வொரு நாளும் அன்புமணி ஒரு பக்கமும், ராமதாஸ் ஒரு பக்கமும் பாேட்டா போட்டி போட்டு வருகிறார்கள். இந்நிலையில், தமிழ் சினிமாவில் பல தேசிய விருதுகளை குவித்த இயக்குநர் ஒருவர் ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பெயரும் தயராகிவிட்டதாம். ராமதாஸிடமும் ஒப்புதல் பெற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

பொற்காலம், பாரதி கண்ணம்மா, வெற்றிக்கொடிகட்டி போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சேரன் தான் இப்படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்திற்கு அய்யா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இன விடுதலைக்கான போராட்டத்தின் வரலாறு என்ற தலைப்புடன் அய்யா என்ற பெயரில் படம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமதாஸ் கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடிக்கவுள்ளதாகவும் சேரன்  இயக்கவிருப்பதாகவும், லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

மருத்துவர் ராமதாஸ், சமூக நீதி மற்றும் வன்னியர் சமூகத்தின் மேம்பாட்டிற்காக போராடியவர். அவரது அரசியல் பயணம், சமூக சீர்திருத்த நடவடிக்கைகள், மற்றும் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு நடத்திய தொடர் போராட்டங்கள் எனப் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை இந்தப் படம் சித்தரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இப்படத்தில் நடிகர்கள் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.