சேலத்தில் பல்வேறு கட்சியில் இருந்து அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக பொதுச் செயலாளரும் சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “ கருணாநிதி குடும்பம் என்ன அரச குடும்பமா? கருணாநிதிக்குப் பின்னர் ஸ்டாலின், ஸ்டாலினுக்குப் பின்னர் உதயநிதி ஸ்டாலின் உதயநிதிக்குப் பின்னர் இன்பநிதி என ஆட்சி செய்வதற்கு” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்துவிட்டது எனவும், திமுகவில் வாரிசு அரசியல் நடக்கிறது எனவும் கூறியுள்ளார். 


மேலும் அவர் பேசுகையில், ”இது ஜனநாயக நாடு. உங்கள் குடும்பத்தினருக்கு அரசியல் சாசனத்தில் என்ன எழுதியுள்ளதா? நீங்கள் என்ன அரச குடும்பமா? அரச குடும்பத்தில் தான் இளவரசர்கள் பதவியேற்பார்கள். அதுபோல் முதலமைச்சர் ஸ்டாலின் தனது மகனை அமைச்சராக்கியுள்ளார். தொண்டர்கள் நிறைந்த கட்சி அதிமுக, தொண்டனை முதலமைச்சராக்கும் கட்சி அதிமுக” என பேசியுள்ளார். 


மேலும் அவர், ”இதுவொரு ஜனநாயக நாடு, இங்கு யார் வேண்டுமானாலும், சட்டமன்ற உறுப்பினர் ஆகலாம், அமைச்சர் ஆகலாம், முதலமைச்சர் ஆகலாம் ஏன் ஜனாதிபதி கூட ஆகலாம். இன்றைக்கு ஜனாதிபதியாக இருப்பது, சாதராணன மலைவாழ் சமூகத்தைச் சார்ந்தவர். காலச்சக்கரம் சுழலும், விரைவில் திமுக ஆட்சி கவிழும். திமுக அமைச்சர்கள் அவ்வளவு ஊழல் செய்துள்ளனர். அமலாக்கதுறை சோதனை செய்யும் போது அமைச்சர்கள் அவர்களாகவே விலகி விடுவார்கள் இதனால் திமுக ஆட்சி விரைவில் கவிழும் என எடப்பாடி பழனிசாமி” பேசினார்.


இதைத் தொடர்ந்து, ”தமிழ்நாட்டில் எதுவுமே செய்யாத ஸ்டாலின், இந்திய அரசியலை தலைமை தாங்க பாட்னா சென்றார். ஆனால் அந்த கூட்டதில் பாதியிலேயே வெளியேறிவிட்டார். இது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு ஃப்லைட்டுக்கு நேரம் ஆகிவிட்டது என கூறியுள்ளார். இவ்வளவு தான் இவரது செல்வாக்கு. தமிழ்நாட்டில் சரியாக ஆட்சி செய்யமுடியாத முதலமைச்சர் பிற கட்சிகளுடன் இணைந்து பிரதமரைக் கொண்டு வருகிறாராம்! கும்பகரணைப் போல் தூங்காமல், இங்காவது சரியான முறையில் ஆட்சி செய்யுங்கள்” என கூறினார். 


மேலும், ”இன்றைக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி மக்களவை உறுப்பினர்கள் மொத்தம் 38 பேர் உள்ளனர். அவர்கள் இதுவரை தமிழ்நாடு மக்களுக்காக செய்தது என்ன? ஆனால் பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருந்த போது, காவிரி நதி நீரில் தமிழ்நாட்டிற்கான பங்கினைப் பெற 23 நாட்கள் பாராளுமன்றம் முடங்கும் அளவிற்கு அதிமுக மக்களவை உறுப்பினர்கள் ஒன்றாக குரல் கொடுத்தனர். நாடாளுமன்றத்தை உங்களால் ஒருநாள் ஒத்திவைக்க முடியுமா?  திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி மக்களவை உறுப்பினர்கள் பெஞ்சை தேய்த்துக்கொண்டு உள்ளனர்” என பேசியுள்ளார்.