தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான நூருல்லா 1977ம் ஆண்டில் தி.மு.க.வின் தீவிர விசுவாசியின் போராட்ட குணத்தை நேரில் பார்த்த அந்த பரபரப்பான நிகழ்வுகளை நம்மிடம் பகிர்ந்துள்ளார்.
ஆர் கிருஷ்ணன் -செல்வராணி ஆகியோரின் மகள் வழிப் பேரனும் சுந்தரராஜன் கே பொன்முடி ஆகியோரின் மகனுமாகிய எஸ் ரவிபிரசாத்துக்கும், ஜி ஸ்ரீனிவாசலு கே லூசிகுமாரி தம்பதியினரின் மகள் G.ஸ்ராவியாவுக்கும் வரும் ஜனவரி 27 காலை திருமணம். அழைப்பிதழைக் கிருஷ்ணனின் குடும்பத்தார் இல்லம் தேடி வந்து என்னிடம் வழங்கி அழைப்பு விடுத்தனர்.
அவசர நிலை:
1975 ஆம் ஆண்டிலிருந்து 77 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் அவசர நிலை அமலில் இருந்தது. கடும் சர்ச்சையைக் கிளப்பிய இந்த சட்டத்தை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் பரிந்துரையின்பேரில் அக்கால ஜனாதிபதி பக்ருதீன் அலி அஹமத் பிறப்பித்திருந்தார். இந்திய வரலாற்றில் இன்னொரு இருண்ட காலம் என்று வருணிக்கப்படும் இந்த காலகட்டத்தில் திமுக தலைவர்கள் கடும் சிரமங்களை அனுபவிக்க வேண்டி இருந்தது. மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைபட்டு வாடி வதங்கினார்.
அவசரநிலை சட்டம் வாபஸ் பெறப்பட்ட பிறகு அடுத்தடுத்த நிகழ்வுகள் காரணமாக இந்திரா காந்தி தனது பிரதமர் பதவியை இழந்தார். உச்சபட்ச அதிகாரத் தோரணையோடு இருந்த இந்திரா காந்தி தனது பிரதமர் பதவியை இழந்த பிறகு, அடங்கி ஒடுங்கி விழுந்துவிடாமல் நாடெங்கும் சுற்றுப்பயணங்கள் நிகழ்த்தத் தொடங்கினார். இவ்வாறாக அவர் 1977 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு வருகை புரிந்தார். அவசர நிலை சட்டம் வாபஸ் ஆன பிறகு, அவர் முதல் முறையாக தமிழகத்திற்கு வந்த சமயத்தில் தி.மு.க., அவருக்கு எதிராகக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிப்பு வெளியிட்டது.
இந்திரா காந்தி சென்னைக்கு வந்து சேர்ந்தபோது, சென்னையில் பெருமளவில் கலவரம் மூண்டது. ரயில்கள் எரிக்கப்பட்டன. பஸ்கள் கொளுத்தப்பட்டன. சாலைகள் மறிக்கப்பட்டன. திமுக தொண்டர்கள் சாலைகளில் குவிந்து, கருப்புக் கொடிகளை ஏந்தி, இந்திரா காந்திக்கு எதிரான எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியவாறு பேரணிகள் நடத்தினர்.
இந்திராகாந்திக்கு கருப்புக்கொடி:
இந்திரா காந்தி காலை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்து அவர் மாநகருக்குள் கார் வழியாக வருவதாகத் திட்டம். எனவே கிண்டியில் ஹால்டா சந்திப்பு என்ற இடம் அருகே, செல்லம்மாள் மகளிர் கலைக் கல்லூரிக்கு எதிரே இருந்த முச்சந்தியில் இந்திரா காந்திக்குக் கருப்பு கொடி காட்டுவது என்று திமுக தீர்மானித்திருந்தது. அப்போது நான் தினமலர் செய்தியாளனாக... இளம் தளிராக, சென்னையில் பணியாற்றி வந்தேன். தலைமை நிருபர் ராஜாராம், முதல் நாளிலேயே எனக்கு இந்த செய்தியை எழுதப் பணித்துவிட்டார்.
அதன்படி மறுநாள் விடியலிலேயே நான் செல்லம்மாள் மகளிர் கல்லூரி அருகே ஆஜராகி விட்டேன்.
திமுக தொண்டர்கள் ஆக்ரோஷமான கோஷங்களை எழுப்பியவாறு சாலைகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். அப்போது தென் சென்னை போலீஸ் துணை கமிஷனர் ஆக இருந்த தேவாரம் தலைமையில் காவல் படை அங்கே பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தது. கைத்துப்பாக்கி ஏந்திய படி, தேவாரம் நடு சாலையில் கம்பீரமாக அங்குமிங்கும் நடைபயின்று கொண்டிருந்தார்.
யார் இந்த ஆர் கிருஷ்ணன்?
இந்திரா காந்தியின் விமானம் தரையிறங்கி விட்டது என்று தகவல் வந்ததும், தேவாரம் உரத்த குரலில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். "சாலைகளில் குழுமி இருக்கிற கும்பல் அனைத்தும் உடனடியாக கலைந்து போய் விட வேண்டும். இல்லையே அவர்களின் மீது தடியடி நடத்தப்படும்" என்று தேவாரம் அப்போது எச்சரித்தார். ஆனால் திமுக தொண்டர்களோ இன்னும் ஆவேசமாகப் போர்க் குரல் எழுப்பிக் கொண்டே இருந்தார்கள்.
இதனால் தடியடி நடத்துவதற்கான ஆணையை தேவாரம் பிறப்பித்தார். போலீசார் தங்களுக்கே உரித்தான பாணியில் லத்தி சகிதம் களமிறங்கினர். அப்போது போலீசார் தடியடி நடத்த, திமுக தொண்டர்கள், அவர்கள் மீது கல் வீச்சு நடத்த...ஒரு போர்க்களக் காட்சி தென்பட்டது.
சாலையோரம் நின்றபடி நான் இவற்றைக் கவனித்துக் குறித்துக் கொண்டிருந்தேன். அப்போது என் அருகில் ஓர் இளைஞர் நின்றிருந்தார். அவரின் கையிலும் திமுக கொடி. ஆவேச கூக்குரல் எழுப்பிய படி அவரும் களமாடிக் கொண்டிருந்தார். அவர் தான் கிருஷ்ணன் என்று அப்போது எனக்குத் தெரியாது.
துப்பாக்கிச்சூடு:
தடியடியால் பயனில்லை என்று முடிவு கட்டிய தேவாரம், அடுத்த கட்ட அதிரடி அறிவிப்பை பிறப்பித்தார். "சாலையில் கூடியிருக்கிற அனைவரும் உடனே கலைந்து போய் விட வேண்டும். இல்லையேல் துப்பாக்கி சூடு நடத்தப்படும்" என தேவாரம் கூவினார். ஆனாலும் கூட்டம் கலைவில்லை. அடுத்த சில நிமிடங்களில் தேவாரமே களமிறங்கி, துப்பாக்கி சூடு நடத்தினார். தொண்டர்கள் சிதறி ஓடினார்கள். பல பேர் தேவாரத்தின் மீது கற்களை வீசினார்கள். மற்றும் பல பேர் திமுக கொடியைத் தாங்கியிருந்த தடிகளைக் கொண்டு போலீசாரைத் தாக்கத் தொடங்கினார்கள். அவர்களும் துப்பாக்கி சூட்டின் பின் பக்கத்துக் கட்டடங்களுக்குள் ஓடி ஒளியலாயினர்.
துப்பாக்கி சூடு நடத்தி முடித்த அடுத்த பத்தாவது நிமிடமே, ஓரமாக நின்றிருந்த நிருபர்களை தேவாரம் அழைத்தார். நாங்களெல்லாம் ஓடிச் சென்றோம். அப்போது என்னுடன் அப்போதைய ஹிந்து ஆங்கில நாளிதழின் நிருபரான ஆர் பி என்று அழைக்கப்படக்கூடிய ஆர். பார்த்தசாரதியும் இருந்தார். உடன் அலை ஓசை ராமதாஸும் கூட வந்தார்.
உயிரிழந்த தொண்டர்:
சாலையின் நடுவே நின்றபடியே எங்களிடம் தேவாரம் இப்படி பேசினார்: "துப்பாக்கி சூடு நடத்தினேன். இரண்டு பேர் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்நதன. ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். மற்றொருவரின் தொடையில் குண்டு பாய்ந்து இருக்கிறது. அவர் உயிருடன் தான் இருக்கிறார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு போக ஏற்பாடு செய்திருக்கிறோம். அனேகமாக இன்று இரவுக்குள் அவரும் இறந்து விடுவார் என்று கருதப்படுகிறது. ஆகவே செய்தியை எழுதுவதற்கு முன்னதாக இரவு அவரின் நிலை என்ன என்று தெரிந்து கொண்டு பிறகு செய்தியை எழுதுங்கள்" என்று தேவாரம் தனது பேட்டியில் எங்களிடம் தெரிவித்தார்.
அதன் பின்னர் அவர் தெரிவித்தது தான் அதிரடி. "சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் கொளுத்தப்பட்டு இருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. எங்கள் போலீஸ் படை விரைந்திருக்கிறது. அவசியமானால் நீங்களும் போய் அதை பார்த்துக் கொள்ளுங்கள்." என்று வழிகாட்டி விட்டார். அப்போது நானும் பார்த்தசாரதியும் அங்கு சென்றோம். கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த ரயிலுக்குள் ஏறி நடந்து, அவற்றைகக் கவனித்துக் குறித்தோம். இவ்வாறாக வரலாற்று நிகழ்வுகள் தொடர்கின்றன. என்றாலும் இந்தப் பதிவுக்குத் தேவையான செய்தியோடு நாம் சுருக்கிக் கொள்வோம்.
தீவிர தி.மு.க. விசுவாசி:
தேவாரத்தின் துப்பாக்கிக் குண்டுக்கு உள்ளான கிருஷ்ணன் அப்போது இறக்கவில்லை. மருத்துவமனையில் சிகிச்சைகள் பெற்று பிழைத்து விட்டார். 84 வயது வரை வாழ்ந்து, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் தான் மரணம் அடைந்தார். அவரின் குடும்பத்தாரோடு எனக்குப் பாசபூர்வமான பந்த பரிட்சயம் உண்டு.
எனவேதான் கிருஷ்ணனின் பேரன் திருமணத்திற்கு எனக்கு அழைப்பிதழ் முறைப்படி இல்லம் தேடி வந்து கொடுத்திருக்கிறார்கள்.
தண்டையார்பேட்டையில் உள்ள மெட்டல் பாக்ஸ் தொழிலாளியாக இருந்தவர். தீவிர திமுக விசுவாசி. அந்தப் பகுதியின் துணைச் செயலாளராக கூட இருந்து வந்தார். உயிரைத் துச்சமென மதித்து, திமுகவின் போராட்டத்தில் துப்பாக்கிக் குண்டையே சந்தித்தவர் கிருஷ்ணன். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் திமுக மேலிடத்தால்
கவனிக்கப்பட முடியாத ஒரு தொண்டராகப் போய்விட்டார்.
அன்சங் ஹீரோ:
ஆங்கிலத்தில், அன்சங் ஹீரோ" என்று ஒரு வாசகம் உண்டு. அதுபோன்றே, நாடப்படாத நாயகனாகக் கிருஷ்ணன் வாழ்ந்து மறைந்து விட்டார். அவரின் போர்க் குணத்திற்கும் தலைமையின் போராட்ட அறிவிப்பிற்கு ஏற்பக் களம் இறங்கி நெஞ்சு நிமிர்த்தியதற்கும் அரசியல் வரலாறு, உரிய அத்தியாயத்தை ஒதுக்கிக் கொடுக்க முடியாமலேயே போயிற்று. அத்தகைய திமுக தீரருக்கு என் நினைவுப் போற்றுதலைப் பதிவு செய்கிறேன். வேறு எந்த கட்சிக்குமே இல்லாத ஒரு புதுமை திமுகவுக்கு உண்டு. அக்கட்சியின் பிரச்சார பீரங்கியான முரசொலி நாளிதழில் திமுக தீரர்கள் பற்றிய நினைவு அறிவிப்புகள் பெட்டிச் செய்திகளாக தூரம் வந்து கொண்டே இருக்கின்றன. கிருஷ்ணனைப் பற்றிய தகவல்களும் வருவதற்கான தகுதி உண்டு.
கட்டுரை ஆசிரியர்: நூருல்லா, மூத்த பத்திரிகையாளர்
இந்த தொண்டர் தி.மு.க. தலைமையால் கவனிக்கப்பட வேண்டும் என்பதே கட்டுரையாளரின் கருத்து.