Rahul Gandhi: மேற்கு வங்க மாநிலத்திற்கு ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை ஒதுக்க வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.


காங்கிரஸ் - மம்தா பானர்ஜி முரண்:


ராகுல் காந்தி தனது நியாய யாத்திரையின் ஒரு பகுதியாக, அண்மையில் தான் மேற்கு வங்கத்தில் நடைபயணம் மேற்கொண்டார். இதனிடயே, I.N.D.I.A. கூட்டணியில் தொடர்ந்தாலும், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படமாட்டாது, திரிணாமுல் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என அக்கட்சி தலைவரும், மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இந்த சூழலில் தான், மேற்குவங்க அரசின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி, பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.


பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்:


ராகுல் காந்தி எழுதியுள்ள அந்த கடிதத்தில், “மேற்கு வங்காளத்தில் உள்ள மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட (MGREGS) தொழிலாளர்களின், பேரழிவு நிலை மற்றும் நீதிக்கான அவர்களின் இடைவிடாத போராட்டம் தொடர்பாக நான் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன். பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் ஒரு பகுதியாக மேற்கு வங்காளத்திற்கு சமீபத்தில் நான் சென்றிருந்தபோது, ​​MGNREGS தொழிலாளர்களின் ஒரு குழு, தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து என்னிடம் கூறினர். பிரதிநிதித்துவத்தின் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறையால் பல தொழிலாளர்களுக்கு 2021-ல் செய்த பணிக்கான ஊதியமே இதுவரை வழங்கப்படவில்லை என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. 2021-22ல் 75 லட்சமாக இருந்த வேலை பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை, 2023-24ல் 8000க்கும் குறைவான குடும்பங்களாக சரிந்துள்ளது. இது பெண்கள் மற்றும் எஸ்சி & எஸ்டியினர் மீது கொடூரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. MGNREGS வேலை இல்லாமை மற்றும் நிலுவையில் உள்ள ஊதியங்கள் ஆகிய பிரச்னைகள்,  பலரை புலம்பெயர்வு போன்ற கடினமான தேர்வுகளை செய்ய நிர்ப்பந்தித்துள்ளன. மார்ச் 2022 முதல் மேற்கு வங்காளத்திற்கு மத்திய அரசின் நிதி நிறுத்தப்பட்டதால் லட்சக்கணக்கான சகோதர சகோதரிகளுக்கு MGREGS இன் கீழ் வேலை மற்றும் ஊதியம் மறுக்கப்பட்டுள்ளது” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.






அரசியல் கணக்குகள் நிறைவேறுமா?


மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை வழங்கவில்லை என, மத்திய அரசை கண்டித்து மேற்குவங்க அரசு நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறது. இதுதொடர்பாக, அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்தும் மம்தா பானர்ஜி வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் தான், மம்தா பானர்ஜிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதன் மூலம், மம்தாவின் கோபம் தணிந்து, மீண்டும் காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தையை தொடங்குவார் என அக்கட்சி மேலிடம் எதிர்பார்க்கிறது. அதேநேரம், ராகுல் காந்தியின் கடிதத்திற்கு பிரதமர் மோடியின் பதில் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது.