பாமகவில் உட்கட்சி மோதல்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. அதே நேரம் பாமகவில் உட்கட்சி மோதலால் இரண்டு பிளவாக பாமக உள்ளதால் நிர்வாகிகளும் இரு பிரிவாக பிரிந்து உள்ளனர். இதன் காரணமாக பாமக தொண்டர்கள் எந்த பக்கம் நிற்பது, என்ன செய்வது என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் ராமதாஸ்- அன்புமணிக்கு இடையிலான மோதல் வெளி உலகத்திற்கு தெரியவந்த நிலையில், இரு தரப்பிற்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனையடுத்து ஒரு தரப்பினரை மற்றொரு தரப்பினர் கட்சியில் இருந்து நீக்கியும், புதிய நிர்வாகிகளை நியமித்தும் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர்.
பாமக பெயரை பயன்படுத்த தடை
இதனையடுத்து இரு தரப்பும் போட்டி பொதுக்குழு நடத்தியது. ஒரு தரப்பில் ராமதாஸ் தான் பாமக தலைவர் என தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மற்றொரு தரப்பில் அன்புமணி தான் பாமக தலைவர் என அறிவிப்பு வெளியிடப்படது. இந்த நிலையில் இந்த பிரச்சனை நீதிமன்றம், தேர்தல் ஆணைநம் என அடுத்தடுத்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் அன்புமணிக்கு செக் வைக்கும் வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் நாளிதழ்களில் எச்சரிக்கை அறிவிப்போடு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், இதன் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் கடைசியாகத் தெரிவிக்கப்படுவது என்னவென்றால், பாட்டாளி மக்கள் கட்சி தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் W.P.(C) No.18311/2025 ល. 04.12.2025 வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம்,மருத்துவர் அன்புமணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற உரிமையோ, கட்சியின் பெயர், கொடி, சின்னம் பயன்படுத்தும் உரிமையோ எதுவும் இல்லை என்பது சட்டபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
அன்புமணிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய ராமதாஸ்
அத்துடன், தேர்தல் ஆணையம் 09.09.2025 மற்றும் 27.11.2025 அன்று பிறப்பித்த உத்தரவுகள் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவை என்றும். சட்ட அதிகாரமற்றவை என்றும் உயர்நீதிமன்றம் தெளிவாக அறிவித்துள்ளது. எனவே, எந்த அரசியல் கட்சியும், தனிநபரும், அமைப்பும், மருத்துவர் அன்புமணி மற்றும் வேறு எவருடனும் பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல், தேர்தல் அல்லது நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொண்டால், அது சட்டப்படி குற்றமாகும். மேற்கண்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறி தொடர்ந்து செயல்படுவோர மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உட்பட சட்டப்படி கடுமையான நடவடிக்கை தவறாமல் மேற்கொள்ளப்படும் என்பதும் இதன் மூலம் கடைசியாக எச்சரிக்கப்படுகிறது என தெரிவிக்கப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.