பாமகவில் உட்கட்சி மோதல்

பாமகவில் உட்கட்சி மோதல் உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் பாமக பொதுக்குழு கூட்டத்தின் போது ராமதாஸ்- அன்புமணிக்கு இடையில் தொடங்கிய மோதல் ஒரு வருடத்தை கடந்தும் இன்னும் தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக பாமகவில் அன்புமணி தரப்பில் ஒரு அணியும், ராமதாஸ் தரப்பில் ஒரு அணியும் செயல்பட்டு வருகிறார்கள்.  இந்த நிலையில் தேர்தல் நெருங்க நெருங்க இரண்டு அணிகளும் தனி தனி கூட்டணியை அமைக்க திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் அன்புமணி அணியானது அதிமுக- பாஜக தலைமையில் கூட்டணியில் இணைந்துள்ளது. ராமதாஸ் தரப்பிலோ திமுக அணியில் இணைய காய் நகர்த்தி வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது.

Continues below advertisement

இதற்கிடையே அன்புமணி தரப்பு நிர்வாகிகளை ராமதாசும், ராமதாஸ் தரப்பு நிர்வாகிகளை அன்புமணியும் கட்சியை விட்டு மாறி மாறி நீக்கி வருகிறார்கள். ஏற்கனவே ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏக்களாக உள்ள ஜி.கே. மணி மற்றும் அருள் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி அன்புமணி உத்தரவிட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அன்புமணி தரப்பு ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேரையும் கட்சியில் இருந்து நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் நீக்கம்

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி, கொறடா அருளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்களிடம் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய ஒழுங்கு நடவடிக்கை குழுவின் மூலம் விளக்கம் கேட்டு 20.07.2025-ல் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் அய்யா அவர்களிடம் நேரிலோ, தொலைபேசியிலோ அல்லது கடிதம் மூலமாகவோ எந்தவித பதிலும் அளிக்காமல் தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால்,  

Continues below advertisement

மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சசிவக்குமார், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர்  எஸ்.சதாசிவம், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆகிய மூவரும் கட்சியின் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருந்த அவர்கள் மூவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் இன்று 12.01.2026 முதல் முழுமையாக நீக்கப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார். எனவே பாட்டாளி மக்கள் கட்சியினர் யாரும் மேற்கண்ட மூவரிடம் எந்தவித கட்சித் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாக அந்த அறிவிப்பில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.