முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சுமார் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழகத்தில் நீண்ட ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதினார்.


இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கையில், “பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவர் விரைந்து முடிவெடுக்குமாறு தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த பிரச்சனையில் காட்டியிருக்கும் அக்கறையை பாராட்டுகிறோம். ஆனால், அதே நேரத்தில் மாநில அதிகாரத்தை விட்டுக்கொடுக்காமல் இந்த விடுதலையை சாத்தியப்படுத்துவதற்கு தமிழக அரசு முன்வரவேண்டும். அதற்கு மீண்டும் அமைச்சரவையில் தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பவேண்டும் என்கிறோம்.




கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதை சுமார் 2 ஆண்டுகள் கிடப்பில் போட்ட ஆளுநர், சி.பி.ஐ.யின் பல்நோக்கு விசாரணை முடிவடையாததை காரணமாக கூறினார். ஆனால், அந்த விசாரணைக்கும் 7 பேர் விடுதலைக்கும் எந்த தொடர்பும் இல்லையென்று சி.பி.ஐ. உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. அதன்பின்னரும், முடிவெடுக்காமல் தாமதப்படுத்தி வந்த ஆளுநர் குடியரசுத்தலைவர்தான் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும். எனவே, அவருக்கே அனுப்பிவிட்டேன் என்று கூறினார். அப்படி, அவர் அனுப்பியிருந்தால் அது சட்டவிரோதம். மாநில அரசின் அதிகாரத்தை மீறியதாகும். அரசியலமைப்புச் சட்டம் 161-இல் தண்டனை குறைப்பு செய்வதற்கு மாநில அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. அது பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.




தமிழக அரசு நல்லெண்ண அடிப்படையில் குடியரசுத் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தாலும், அதில் மாநில அரசின் அதிகாரத்தை பறித்த ஆளுநரின் நடவடிக்கையை நியாயப்படுத்துவதாக அமையும் ஆபத்துள்ளது. 7 பேர் விடுதலையில் தமிழக அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. அ.தி.மு.க.வின் தன்னலம் காரணமாகவே 7 பேர் விடுதலை இத்தனை ஆண்டுகள் தள்ளிப்போனது. அந்த தவறை சரி செய்யவேண்டிய கடமை தற்போதைய அரசுக்கு உள்ளது. எனவே, 7 பேரையும் விடுவிப்பதாக மீண்டும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். ஆளுநரிடம் இருந்து ஒப்புதல் வரும்வரை அவர்கள 7 பேரையும் பரோலில் விடுவிக்கவேண்டும்” என்று கூறியுள்ளார். இவர்கள்7 பேர் விடுதலைக்கும் தி.மு.க. கூட்டணியில் இடம்பிடித்துள்ள காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.