பிகாரின் பகல்பூர் நகரில் நவம்பர் 7 ஆம் தேதி நடந்த பிரம்மாண்டக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி, பிகார் முதல்வர் நிதிஷ் குமார், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவை குறிவைத்து அவர் ஆட்சியில் நிலவி வரும் வாரிசு அரசியல் குறித்து கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ஜெய் ஷா மீது சாடல்:
பீகாரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைப்பெற உள்ள நிலையில் ராகுல் காந்தி இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கினார். அப்போது , பிரதமர் நரேந்திர மோடி, பிகார் முதல்வர் நிதிஷ் குமார், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்தார். அப்போது அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவை விமர்சித்த அவர் "நீங்கள் அதானி, அம்பானியின் மகனாகவோ அல்லது அமித் ஷாவின் மகனாகவோ இருந்தால் மட்டுமே, நீங்கள் பெரிய கனவுகளைக் காண முடியும். அமித் ஷாவின் மகனுக்கு (ஜெய் ஷா) பேட் பிடிக்கக் கூடத் தெரியாது, ரன் எடுப்பதை மறந்துவிடுங்கள். ஆனால் அவர் கிரிக்கெட்டின் தலைவர். கிரிக்கெட்டில் உள்ள அனைத்தையும் அவர் கட்டுப்படுத்துகிறார். அவர் ஏன் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறார்? பணத்தின் காரணமாக" என்றார்.
சீன இறக்குமதியால் அதானியும் அம்பானியும் பயனடைகிறார்கள்'
கார்ப்பரேட் நலன்களுக்காக பீகாரில் வேலைவாய்ப்பு வேண்டுமென்றே அழிக்கப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். 'அதானி மற்றும் அம்பானி சீனப் பொருட்களை இந்தியாவில் விற்க விரும்புகிறார்கள். அவர்கள் உங்களை தொழிலாளர்களாகப் பார்க்க விரும்புகிறார்கள். சீனப் பொருட்கள் இந்தியாவில் விற்கப்படும்போது, யாருக்கு லாபம்? சீனாவில் உள்ள தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் அதானி மற்றும் அம்பானி போன்ற தொழிலதிபர்கள்,' என்று அவர் கூறினார்.
மேலும், 'மோடியின் முகத்தை அதானி மற்றும் அம்பானி பயன்படுத்துகிறார்கள். அவர்கள் பாஜகவுக்கு நிதியளிக்கிறார்கள், அதற்கு ஈடாக நிலத்தையும் சலுகைகளையும் பெறுகிறார்கள். பாஜகவின் பிரச்சாரம் அவர்களின் பணத்தில் இயங்குகிறது
NDA மீது விமர்சனம்:
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிரான தனது விமர்சனத்தைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்களை அழிக்க மோடி அரசு சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) கொண்டு வந்தது என்று கூறினார்.
ஏழைகளின் நிலத்தை அபகரித்து, அம்பானி, அதானி போன்ற தொழிலதிபர்களுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நன்கொடையாக வழங்குவதாக அவர் குற்றம் சாட்டினார்.
பீகார் சட்டமன்றத்தின் 243 இடங்களில் மொத்தம் 122 இடங்களுக்கு நவம்பர் 11 ஆம் தேதி இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். முடிவுகள் நவம்பர் 14 ஆம் தேதி அறிவிக்கப்படும்.