மயிலாடுதுறை: தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியின் கீழ் சட்டம்-ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்துவிட்டதாகவும், குறிப்பாகப் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை நீடிப்பதால், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வை மக்கள் அடித்து விரட்டுவார்கள் என்றும் பா.ஜ.க. மூத்த தலைவர் எச். ராஜா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தின் 27-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் 60-வது ஆண்டு மணிவிழா தற்போது நடைபெற்று வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த ஆன்மீக மாநாட்டின் ஒரு பகுதியாக, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான எச்.ராஜா ஆதீன மடத்திற்கு வருகை புரிந்தார். மடத்திற்கு வருகை தந்த எச்.ராஜா, தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானத்திடம் ஆசி பெற்றார். அதனைத் தொடர்ந்து, ஆதீன கலைக் கல்லூரியில் நடைபெற்று வரும் மணிவிழா மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த எச். ராஜா, தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு மற்றும் அரசியல் சூழல் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு!
தி.மு.க. ஆட்சியின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்த எச். ராஜா, “தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு குற்றச் செயல்களின் எண்ணிக்கையும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் பன்மடங்கு அதிகரித்துள்ளன. சட்டம்-ஒழுங்கு சீர்குலைவில் தமிழகம் இன்று முதலிடத்தில் உள்ளது. மக்களைக் காப்பாற்றத் தெரியாத காவல்துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ‘தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது’ என்று ஆணவமாகப் பேசி வருகிறார்.”
“ஸ்டாலினுக்கு அழிவு நிச்சயம்”
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இந்த ஆணவப் பேச்சு “அழிவுக்கு முன்னாள் ஆணவம் செல்லும் என்ற பழமொழி போல, ஸ்டாலினுக்குப் பெரும் அழிவு நிச்சயம்” என்று சாபமிட்டார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆண்டிற்குச் சுமார் 2,000 ஆக இருந்த நிலையில், தற்போது இந்தக் குற்றங்களின் எண்ணிக்கை 9,000-ஐத் தாண்டிவிட்டது என்றும் எச். ராஜா அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
“இன்றைய தி.மு.க. ஆட்சியில் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு இளம்பெண் அல்லது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார். தமிழகத்தில் 7 வயது சிறுமி முதல் 70 வயது மூதாட்டி வரை எந்தப் பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லாத அவல நிலை நிலவுகிறது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 52 மாதங்களில் மட்டும் சுமார் 6,700 படுகொலைகள் மாநிலத்தில் நடைபெற்றுள்ளன.”
“தி.மு.க.வை மக்கள் அடித்து விரட்டுவார்கள்”
தமிழக அரசுக்கு எதிராகப் பொதுமக்கள் மத்தியில் கடுமையான மனநிலை உருவாகியுள்ளது என கூறிய எச். ராஜா, வரும் தேர்தலைப் பற்றியும் தனது கருத்தைப் பதிவு செய்தார்.“தமிழக மக்கள் இனி தங்கள் வாக்குகளைச் சிதறடிக்க மாட்டார்கள். தி.மு.க.வின் இந்தச் சீர்கெட்ட ஆட்சியை நீக்க, தேசிய ஜனநாயக கூட்டணியால் (NDA) மட்டும்தான் முடியும் என்று மக்கள் உறுதியாக நம்புகிறார்கள். எனவே, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத்தான் வாக்களிப்பார்கள். தமிழக மக்கள் தி.மு.க.வை அடித்து விரட்டுவார்கள்,” என்றார். பா.ஜ.க. மூத்த தலைவரின் இந்தக் கடுமையான விமர்சனங்கள், தமிழக அரசியலில் சட்டம்-ஒழுங்கு விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.