பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்களவை தேர்தல் நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு, தற்போது புதிய அரசும் பதவியேற்றுள்ளது. 240 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது.


300, 350 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகின. ஆனால், ஒட்டு மொத்த நாட்டின் அரசியலையும் உத்தர பிரதேசம் திருப்பி போட்டுள்ளது. பாஜகவின் கோட்டையாக கருதப்பட்ட உத்தர பிரதேசத்தில் 43 இடங்களை இந்தியா கூட்டணி கைப்பற்றியுள்ளது. பாஜகவால் 33 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. 


மக்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி: காங்கிரஸ் கட்சியின் கோட்டைகளாக கருதப்படும் ரேபரேலி, அமேதியை அக்கட்சி தக்க வைத்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தோல்வி அடைந்திருந்தார். ஆனால், இந்த முறை தனக்கு நெருக்கமானவராக கருதப்படும் கே.எல். சர்மாவை களத்தில் இறக்கி வெற்றி பெற செய்துள்ளார் ராகுல் காந்தி. அதோடு, ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியுள்ளார்.


இந்த நிலையில், அமேதி, ரேபரேலி தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரேபரேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.எல்.சர்மா ஆகியோர் இன்று பங்கேற்றனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, "அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவையும், ரேபரேலியில் என்னையும், உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்களையும் வெற்றி பெறச் செய்தீர்கள்.


ஒட்டுமொத்த நாட்டின் அரசியலையும் மாற்றிவிட்டீர்கள். இந்த நாட்டின் பிரதமருக்கு பொதுமக்களாகிய நீங்கள் சரியான செய்தி அனுப்பியுள்ளனர். அரசியல் சட்டத்தை தொட்டால், மக்கள் அவரை என்ன செய்வார்கள் என்று பாருங்கள்.


எங்களை வெற்றி பெறச் செய்த அனைத்து தலைவர்களுக்கும், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கும், அமேதி மற்றும் ரேபரேலி மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முறை காங்கிரஸ் கட்சி அமேதி, ரேபரேலி, உத்தரபிரதேசம் மற்றும் நாடு முழுவதும் ஒற்றுமையாக போராடியது.


"வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டிருந்தால்": இந்த முறை உங்கள் தலைவர்கள் காங்கிரஸ் தலைவர்களுடன் ஒற்றுமையாக போராடினார்கள் என்பதை சமாஜ்வாடி கட்சிக்கு நான் சொல்ல விரும்புகிறேன்" என்றார்.


தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "அயோத்தி தொகுதியை பாஜக இழந்திருக்கிறது. அயோத்தியில் மட்டுமல்ல, வாரணாசியிலும் தன்னை காப்பாற்றி கொண்டுள்ளார் பிரதமர். வாரணாசியில் என் சகோதரி (பிரியங்கா காந்தி) போட்டியிட்டிருந்தால், இன்று இந்தியப் பிரதமர் வாரணாசியில் தோற்றிருப்பார். 2-3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பார்" என்றார்,


பின்னர் பேசிய பிரியங்கா காந்தி, "இது ஒரு வரலாற்று வெற்றி. நாட்டில் தூய்மையான அரசியல் வேண்டும் என்று நீங்கள் அனைவரும் தேசம் முழுவதும் ஒரு செய்தியை அனுப்பியுள்ளீர்கள் என்பதை நான் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த முடிவுக்காக நாங்கள் இரவு பகலாக உழைத்தோம். எனது மூத்த சகோதரரை வெற்றிபெறச் செய்த ரேபரேலி மக்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். எங்களுக்காக நீங்கள் காட்டிய உற்சாகத்துடன் நாங்கள் உங்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்" என்றார்.