இந்திய நாடாளுமன்றத்தின் 18-வது அவையில் பெரும்பான்மை பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவரான, நரேந்திர தாமோதர்தாஸ் மோடி, தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராகப் பதவியேற்றப் பிறகு, தம்முடைய அணுகுமுறையில் அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார். மேலும் தம்முடைய 71 அமைச்சர்களின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பது குறித்து தொடர்ந்து கண்காணிக்க திட்டமிட்டுள்ளார்.
இதற்காக, “சீனியர், ஜூனியர்” என்று பார்க்காமல், தம்முடைய அமைச்சர்கள் அனைவருக்கும் 5 உத்தரவுகளைப் போட்டுள்ளார். இந்த உத்தரவுகளைக் கட்டாயம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமது 3.O முதல் அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார் என பிரதமர் அலுவலகத் தகவல்கள் நமக்கு உறுதிப்படுத்துகின்றன.
பிரதமரின் 5 உத்தரவுகள்:
தமது அமைச்சரவை சகாக்களுக்கு பிரதமர் மோடி போட்ட அந்த 5 உத்தரவுகளைத் தற்போது பார்ப்போம்
1. அமைச்சர்கள் யாரும் பொதுவெளியில் தேவையற்ற கருத்துகளைத் தெரிவிக்கக்கூடாது என முதல் உத்தரவு.
2. அவரவர் அமைச்சுப் பணிகள் குறித்தும் அவரவரது அமைச்சகத் தொடர்புடைய விடயங்களில் மட்டுமே கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். மற்றவர்களின் அமைச்சுப் பணிகளில் தலையிடக்கூடாது என இரண்டாவது உத்தரவு.
3. மூன்றாவதாக, தன் அமைச்சரவை சகாக்கள், அவர்களிடம் கேட்கப்படாத நிலையில், தேவையற்ற ஆலோசனைகள் மற்றும் பிரசங்கம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என உத்தரவு.
4. நான்காவதாக, அமைச்சர்கள் அனைவரும் சரியான நேரத்தில் தத்தமது அலுவலங்களுக்கு வர வேண்டும். இதன் மூலம், மற்ற அலுவலர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
5. ஐந்தாவதாக, மூத்த அமைச்சர்கள் மற்றும் கேபினட் அந்தஸ்தில் உள்ளவர்கள், தம்முடைய அமைச்சகம் தொடர்பான கோப்புகள், முடிவுகள் ஆகியவற்றை தம்முடைய இணை அமைச்சர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம், அமைச்சகப்பணிகள் தங்கு தடையின்றி தொடர வேண்டும் என உத்தரவு.
இந்த உத்தரவுகள் அனைத்தையும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி, தமது முதல் அமைச்சரவை கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.
“ரிப்போர்ட் கார்ட்” திட்டம்:
இதுமட்டுமன்றி, ஒவ்வொரு துறையிலும் அமைச்சர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது? அரசின் திட்டங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறதா? அமைச்சர் மற்றும் அவரின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் செயல்பாடு எப்படி இருக்கிறது? உள்ளிட்டவை குறித்து, அடிக்கடி கண்காணித்து, அது தொடர்பான “ரிப்போர்ட் கார்ட்” பாணியில் அறிக்கை தயாரிக்கும்படி பிரதமர் சார்பில் சிலருக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் நமக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில், அந்த அமைச்சர்களின் பணிகள் குறித்து அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கவும், நடவடிக்கை எடுக்கவும் பிரதமர் தீர்மானித்திருப்பதாகவும் தெரிகிறது. கடந்த முறையும் இதேபோன்ற சில திட்டங்கள் இருந்தாலும், இம்முறை கூடுதல் கவனத்துடன் இந்தப் பணிகள் கண்காணிக்கப்படும் எனவும் தெரிகிறது.
அமைச்சரவை விரிவாக்கம் எப்போது?
பிரதமரையும் சேர்த்து தற்போது 72 பேர் கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 81 பேர் கொண்டதாக மாற்றலாம். ஏனெனில், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி, அதிகபட்சமாக, மொத்த உறுப்பினர்களில் 15 சதவீதம் பேர்தான், பிரதமரையும் சேர்த்து அமைச்சர்களாக இருக்கமுடியும். அந்த வகையில், பிரதமரையும் சேர்த்து, 81 பேர் தான் அமைச்சர்களாக இருக்க முடியும். தற்போதே 72 பேர் இருப்பதால், இன்னும் அதிகபட்சம் 9 பேர் தான் அமைச்சர்களாக முடியும். தற்போது, மத்திய அரசின் ஆளும் வட்டாரங்களில் இருந்து நமக்குக் கிடைத்த தகவலின்படி, இன்னும் 4 மாதங்களுக்கு எந்தவொரு அமைச்சரவை விரிவாக்கமும் இருக்காது என உறுதியாகத் தெரிகிறது. அதன்பின், அமைச்சர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ப, அவரவரின் “ரிப்போர்ட் கார்ட்” அடிப்படையில் முடிவுகளை பிரதமர் எடுப்பார் எனவும் தகவல்கள் கசிகின்றன.