நாட்டில் 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் வர உள்ளது. இந்த தருணத்தில் தொடர் தோல்விகளால் துவண்டுபோய் விட்ட காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்டும் வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் அந்த கட்சி ‘நவ் சங்கல்ப் சிந்தன் ஷிவிர்’ என்ற பெயரில் 3 நாள் சிந்தனை அமர்வு மாநாடு நடந்தது.


மூன்று நாட்கள் நடைபெற்ற அந்த நிகழ்வில் இறுதியாக பேசிய ராகுல் காந்தி பல உண்மைகளை உடைத்து பேசினார். "மக்களுடனான தொடர்பை நாம் இழந்துவிட்டோம் என்னும் கசப்பான உண்மையை முதலில் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். மக்களுடனான தொடர்பை மீண்டும் முதலில் இருந்து கொண்டு வர கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் வேலை செய்ய வேண்டும். அதற்கு எந்த குறுக்கு வழியும் கிடையாது, கடின உழைப்பே ஒரே வழி" என்று உணர்ச்சி பொங்க பேசி உள்ளார்.



பல ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சியின் மீது வைக்கப்படும் விமர்சனம், அடிமட்டத்தில் வேலை செய்யவில்லை என்பதுதான். தலைமை மாற்றும்போதெல்லாம் கூட இந்த வாதம் பலமுறை முன்வைக்கப் பட்டது. அதனை ராகுல் காந்தியே கூறியிருப்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகுறது. இந்த பிணைப்பை கொண்டு வர, காங்கிரஸ் வரும் அக்டோபரில் இந்தியா முழுவதும் யாத்திரை மேற்கொள்ள இருக்கிறது. இந்த உரையில் காங்கிரஸ் கட்சி மட்டுமே மக்களுக்கு பேசுவதற்கான தளத்தை தருகிறது என்று கூறினார், "பாஜகவோ ஆர்எஸ்எஸ்ஸோ உங்களுக்கு பேசுவதற்கான இடத்தை உருவாக்குகின்றனவா? காங்கிரஸ் மட்டுமே அதை செய்யும்." என்று கூறினார். 



இந்தியா என்பது மாநிலங்கள் அடங்கிய ஒன்றியம். இந்தியர்கள் அனைவரும் இந்த ஒன்றியத்தை அமைக்க ஒன்று கூட வேண்டும். மக்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்துவதற்கான இடமே இந்தியாவில் இல்லை. ஜனநாயகம் அழிந்து விடுமோ என்ற பயம் உருவாகிறது. அப்படி நிகழ்ந்தால் அதற்கு முழு காரணம் பாஜகதான்.  நீங்கள் பயப்படத் தேவையில்லை என்பதை அனைத்து காங்கிரஸ் தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த நாடு உண்மையை நம்புகிறது. என் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் நான் இருக்கிறேன். எந்த மாநிலக் கட்சிகளாலும் இதனை செய்யமுடியாது, ஏனெனில் இது நாட்டை காக்கும் போர், இந்து கருத்தியலுக்கு இடையிலான போர்." என்று உணர்வு பொங்க பேசினார்.


இளம் உறுப்பினர்கள் கட்சியில் சில பதவிகளை வைத்திருக்க வேண்டும் யோசனையை ஆதரித்தார். "குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பதவிகள் இளைஞர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பது ஒரு முக்கியமான யோசனை. அதற்கான நேரம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன், இதை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்… மாவட்ட காங்கிரஸ் கவுன்சில்கள் மற்றும் பிரதேச காங்கிரஸ் கவுன்சில்கள் என்று வரும்போது இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என சமமாக இருக்க வேண்டும். இளைஞர்களால் மட்டுமே ஆர்எஸ்எஸ்ஸின் பொய் பிரச்சாரங்களை எதிர்த்து போராட முடியும்", என்று அவர் கூறினார்.