அதிமுகவிற்கு வாக்களிப்பேன் என திமுக எம்.பி ஆ. ராசா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுக் ஓராண்டு சாதனைக்கூட்டம்:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், திமுக-வின் சார்பில் மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள் பங்கேற்கும் அரசின் ஓராண்டு சாதனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில் சென்னையில் திமுக இளைஞரணி சார்பில் ஓராண்டு சாதனைக்கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் சேகர்பாபு, எம்.பி. ஆ. ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திராவிட மாடலுக்கு விளக்கம்:
இக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும் நீலகிரி எம்.பியுமான ஆ. ராசா, நீட் தேர்வு குறித்து பேசினார். ஆளுநர் கொடுத்த தேநீர் விருந்தை புறக்கணித்து, ஆளுநரை பணிய வைத்து, நீட் தேர்வு மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்ப வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் என புகழாரம் சூட்டினார். இதுதான் திராவிட மாடலுக்கும் மற்றவைகளுக்கும் உள்ள வித்தியாசம் என விளக்கமளித்தார்.
அதிமுகவுக்கு நானே வாக்களிப்பேன்:
அதேபோல், எதிர்க்கட்சிகள் கூறும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு அதிரடியாக பதிலடி கொடுத்தார் ஆ. ராசா. அப்படி பேசும்போது, முன்னால் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ பன்னீர்செல்வமும் அடிக்கடி, நீட் தேர்வை ரத்து செய்தார்களா, பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை வழங்கினார்களா என கேள்வி கேட்பதை சுட்டிக்காட்டினார்.
எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பதில் தரும் வகையில், “நிறைவேற்றாமல் எங்கே போகப் போகிறோம், இந்த 5 ஆண்டு ஆட்சிக் காலத்திற்குள் நிறைவேற்றாவிட்டால், அப்போது சொல்லுங்கள், நீங்கள் வேண்டாம், அதிமுகவுக்கு நானே வாக்களிப்பேன்” என பேசினார். இது தொண்டர்களிடையே சலசலப்பையும் அதே நேரம் ஆரவாரத்தையும் எழுப்பியதை உணர முடிந்தது.
திமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ஒருவர், தமது கட்சித் தொண்டர்கள் நிறைந்த கூட்டமொன்றில், எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பேன் என பேசியது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தமது கட்சியின் ஆட்சி மீதும் முதல்வர் மீதும் உள்ள நம்பிக்கையில், இது போன்ற சவாலை ஆ.ராசா பகிரங்கமாக தெரிவித்திருப்பார் என்றே தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்