திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி திருவாரூர் வருகை தந்தார். இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடமாடும் நேரடி கொள்முதல் நிலைய வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பின்னர் அரசு அரிசி ஆலையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அரிசி ஆலையின் செயல்பாடுகள் மற்றும் அரவைகள் குறித்த தகவல்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது.
குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்வதற்காக ஆய்வு பணிகளை தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு உள்ளோம். திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை 305 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இதுவரை விவசாயிகளிடம் இருந்து 19 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வாரத்தின் 7 நாட்களும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேவைப்படும் இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் 8 நடமாடும் நெல் கொள்முதல் நிலைய வாகனங்கள் இன்று முதல் மாவட்டம் முழுவதும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு அறிவித்தபடி நெல்லுக்கான கூடுதல் விலை அக்டோபர் 1ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அக்டோபர் 5ஆம் தேதி வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டது.
விவசாயிகளிடமிருந்து உடனுக்குடன் நெல்லை கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்படும் நெல் மணிகள் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சென்னை போன்ற மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. அனைத்து தனியார் அரிசி ஆலை உரிமையாளர்களையும் அழைத்து உடனுக்குடன் தரமான அரிசியை பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய ஏதுவான வகையில் அரவை ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான எம்.ஆர்.எம் ஆலைகளில் தரமான அரிசிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் 900 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்திய உணவு பாதுகாப்பு கழகத்தின் ஆலோசனையின்படியே ஒரு நாளைக்கு ஆயிரம் நெல் மூட்டைகள் ஒவ்வொரு நேரடி கொள்முதல் நிலையத்திலும் கொள்முதல் செய்யப்படுகிறது. எனவேதான் கூடுதலாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வருகிறோம். கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி மத்திய அரசின் உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் பியூஸ் கோயலை நேரடியாக சந்தித்து நெல்லுக்கான ஈரப்பதத்தை 21 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இணை இயக்குனர் மற்றும் அதிகாரிகள் டெல்லி சென்று மத்திய அரசு அதிகாரிகளை சந்திக்க உள்ளனர். விரைவிலேயே நெல்லுக்கான ஈரப்பதம் சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம். நடமாடும் நெல் காய வைக்கும் இயந்திரங்கள் தொடர்பாக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விரைவிலேயே விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.
வெளிமாநில நெல் தமிழகத்தில் கொள்முதல் செய்யப்படுவதாக புகார் வந்ததன் அடிப்படையில் தஞ்சாவூர், திருவாரூர் மட்டுமல்லாது அனைத்து இடங்களிலும் மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வெளிமாநில நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரிகள் வந்தால் அதனை உடனடியாக பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர் மழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிருக்கு நிவாரணம் வழங்கப்படுமா என்று கேட்ட கேள்விக்கு., இது தொடர்பாக வேளாண் துறை அமைச்சரிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.