கர்நாடகாவில் பியு கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்டு இருக்கும் தடை குறித்து காங்கிரஸ் கட்சியின் ப்ரியங்கா காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இஸ்லாமிய மாணவியர் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வர கர்நாடகாவில் உள்ள பல்வேறு பியு கல்லூரிகளில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்துத்துவா அமைப்பை சேர்ந்த மாணவர்கள் இஸ்லாமிய மாணவியர் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய பள்ளி நிர்வாகம் தடை விதித்து உள்ளது.
இதன் காரணமாக கர்நாடகாவில் உடுப்பி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இஸ்லாமிய மாணவிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த ஹிஜாப் விவகாரத்தில் மாணவிகள் வைக்கும் கருத்து, நாங்கள் பல வருடங்களாக இப்படித்தான் வகுப்பிற்கு வருகிறோம். அப்போதெல்லாம் இதை யாரும் பிரச்சனையாக்கவில்லை. அப்போது ஹிஜாப் அணிவது இவர்களுக்கு பிரச்சனையாக இல்லை.
தற்போது திடீரென ஹிஜாப் அணியக்கூடாது என்று சில இந்துத்துவா மாணவர்கள் போராடுகிறார்கள். இவர்களை சிலர் தூண்டி விடுகிறார்கள். ஹிஜாப் எங்கள் உரிமை. அது எங்கள் மத அடையாளம் என்று மாணவிகள் குறிப்பிட்டுள்ளனர். அதே சமயம் மாணவிகளுக்கு எதிராக போராடும் இந்துத்துவா மாணவர்கள், பள்ளி என்பது மதத்தை வெளிக்காட்டும் இடம் கிடையாது. மதத்தை காட்ட வேண்டும் என்றால் வெளியே காட்டுங்கள். அல்லது வீட்டிற்குள் இருங்கள். அதைவிட்டு ஹிஜாப்போடு பள்ளிக்கு வர கூடாது.
எல்லோருக்கும் யூனிபார்ம் கொடுத்துள்ளனர். எல்லோருக்கும் விதி ஒன்றுதான். அதை அணிந்து கொண்டுதான் வகுப்பிற்கு வர வேண்டும். அவர்கள் ஹிஜாப் அணிந்தால் நாங்களும் காவி துண்டு அணிவோம் என்று இந்துத்துவா மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து ப்ரியங்கா காந்தி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, "பிகினியோ, முக்காடோ, ஜீன்ஸ் பேண்டோ, ஹிஜாபோ, பெண்கள் எதை அணிய வேண்டும் என்பது அவர்கள் உரிமை… இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுதி அளித்த உரிமைகள் இது. பெண்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள்". என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு கீழே ராகுல் காந்தி தம்ப்ஸ் அப் கொடுத்துள்ளார். ஐந்து மாநில தேர்தல்கள் நாளை துவங்கும் நிலையில் உத்தரபிரதேச தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நாடெங்கும் வெடித்துள்ள இந்த பிரச்னையில் காங்கிரசின் இந்த நிலைப்பாடு இஸ்லாமிய வாக்குகளை தங்கள் பக்கம் திருப்பும் என்று நம்பப்படுகிறது. அசாதுதீன் ஒவைசி இஸ்லாமிய ஓட்டுக்களை பிரிப்பதால் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று தெரிவித்து வந்த நிலையில் இந்த சம்பவம் திருப்பத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.