புதுச்சேரி: புதுச்சேரியில் தேர்தல் நெருங்கும் வேளையில் புதிய கட்சிகள் உருவாக தொடங்கியுள்ளது: 'பி டீம்' அரசியலில் பின்னி எடுக்கும் தலைவர்களால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதிதாக உதிக்கும் கட்சிகள்
தேர்தல் நெருங்கும் வேளையில் புதிய கட்சிகள் உதயமாகுவது என்பது புதிதல்ல. ஆனால், தமிழகத்தையே தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு, புதுச்சேரியில் இப்போது புதிய கட்சிகளின் வரவு களைகட்டத் தொடங்கியுள்ளது.
ரங்கசாமி கட்சி தொடங்கிய வரலாறு
கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலுக்கு வெறும் இரண்டு மாதங்களுக்கு முன்பு, காங்கிரஸிலிருந்து விலகி என்.ஆர். காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி, ஆட்சியைக் கைப்பற்றினார் தற்போதைய முதலமைச்சர் ரங்கசாமி. இதேபோல், காங்கிரஸை விட்டு வெளியேறிய முன்னாள் அமைச்சர் கண்ணன், மூப்பனாரின் தமாகாவில் இணைந்து 6 எம்எல்ஏ-க்களைப் பெற்று அமைச்சரானார். பின்னர் மீண்டும் காங்கிரஸுக்குத் திரும்பி, அங்கு நிலைக்க முடியாமல் வெளியேறி, ‘புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ்’ கட்சியைத் தொடங்கினார். பாமகவிலிருந்து பிரிந்த முன்னாள் எம்.பி.யான ராமதாஸ் உள்ளிட்ட பலரும் தனிக்கட்சி தொடங்கி வெற்றியும் கண்டுள்ளனர், சறுக்கலும் அடைந்துள்ளனர்.
நேருவின் ‘நமது மக்கள் கழகம்’ - ஓரணியில் தலைவர்கள்
இந்தச் சூழலில், தற்போதைய சுயேச்சை எம்எல்ஏ-வான நேரு, அண்மையில் ‘நமது மக்கள் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் ஆளும் என்.ஆர். காங்கிரஸுக்கு ஆதரவளித்த இவர், இப்போது நடுநிலையோடு மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராட்டங்களை நடத்தி வருகிறார். இவருக்கு ஆதரவாக, பின்வரும் முக்கிய தலைவர்களும் ஓரணியில் திரண்டுள்ளனர். முன்னாள் பாஜக தலைவர் சாமிநாதன் (தற்போது பாஜகவிலிருந்து விலகி தனி அமைப்பு நடத்தி வருகிறார்) அதிமுக முன்னாள் எம்எல்ஏ அசனா, தனிக்கட்சி நடத்தி வரும் முன்னாள் பாமக எம்.பி.யான ராமதாஸ் ஆகியோர் மாநில அந்தஸ்து கோரிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இவர்கள் அனைவரும் ஓரணியாகச் செயல்பட இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
புதிய வரவுகளும், 'பி டீம்' விமர்சனங்களும்
இதற்கிடையே, முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் ஆகியோரும் அரசியல் கட்சிகளைத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளனர். தேர்தல் நெருங்கும்போது மேலும் சில கட்சிகள் புதுச்சேரி அரசியலில் முளைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்துப் பேசிய புதுச்சேரியின் அரசியல் பார்வையாளர்கள், "என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள், தங்களுக்குச் சாதகமாகச் செயல்படத் தங்கள் ‘பி டீம்’ களைப் போலப் புதிதாகச் சில கட்சிகளை உருவாக்கக்கூடும் என்று தெரிகிறது. இவர்களின் கணக்கு என்ன, இதனால் யாருக்குப் பலன் கிடைக்கும், இந்த அரசியல் சதுரங்கத்தில் யார் வெற்றிபெறப் போகிறார்கள் என்பதை எல்லாம் இனிமேல்தான் கணிக்க முடியும்" என்று கருத்து தெரிவித்தனர்.
புதிய கட்சிகள் தாக்கத்தை ஏற்படுத்துமா?
புதுச்சேரி அரசியலில் புதிதாக உதயமாகும் இந்தக் கட்சிகள், வரும் தேர்தலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.