புதுச்சேரி: புதுச்சேரியில் ரெஸ்டோ பார்களை மூடக்கோரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் கலால்துறை அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் சுப்ரமணியம்,சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர். தொடர்ந்து கலால்துறையை முற்றுகையிட முயன்ற இளைஞர் காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.


ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:-


”புதுச்சேரியில் மது ஆறு ஓடுவதற்கு போலி சித்தர் ரங்கசாமி தான் காரணம். ஆன்மிக பூமியை தனது சுயநலத்திற்காக போதை பூமியாக மாற்றியுள்ளார். சாலைகளில் பொதுமக்கள் நடக்கவே பயப்படும் சூழல் உருவாகியுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. குடியிருப்புவாசிகள் மது பார் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முதல்வரை வந்து சந்திக்கின்றனர். அப்போது, இன்னும் 100 மதுபார் வரும் என ஆணவத்தோடு ரங்கசாமி கூறுகிறார். வருமானம் வேண்டும் என்பதற்காக மதுபார்களுக்கு அனுமதி தருவதாகவும் அவர் கூறுகிறார். மது வருவாயில் ஒரு ஆட்சி நடக்க வேண்டுமா? ஏற்கனவே 400 மதுபார்கள் புதுவையில் இருந்தது. தற்போது 900 ஆக உயர்ந்துள்ளது.


இன்னும் 40 பார்களுக்கு அனுமதி வழங்கும் கோப்பு முதல்வர் அலுவலகத்தில் உள்ளது. ரூ.20 லட்சம் கொடுத்தால் நள்ளிரவு நடன பாருக்கு அனுமதி, ரூ.15 லட்சம் கொடுத்தால் விடுதிகளில் பார் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. பெஸ்ட் புதுவையை உருவாக்குவோம் என பிரதமர் கூறினார். தற்போது ஒர்ஸ்ட் புதுவையாக மாறியுள்ளது. அதிகாலை வரை மதுபார்களில் குத்தாட்டம் போடுகின்றனர். அதற்கு பிறகும் சாலைகளில் வந்து நடனமாடுகின்றனர். சுற்றுலா பயணிகளை கவர பீர் பஸ் விடுகிறார். அதில் குடித்துக்கொண்டே புதுவைக்கு வந்து குடித்தபடியே திரும்பி செல்வார்களாம்.


காவல்துறையை பொறுத்தவரை மாமூல் கொடுத்தால் போதும் என்ற நிலை உருவாகியுள்ளது. முதல்வருக்கு அவரின் நாற்காலி இருந்தால் போதும். போதை கும்பலால் இறந்த என்ஜினியர் என்ன கனவு கண்டிருப்பார்? அவர் ஒரே பிள்ளை. அவரது தாயார் இழப்புக்கு முதல்வர்  ரங்கசாமி தான் பொறுப்பேற்க வேண்டும். மதுபார் மட்டுமின்றி, 6 மதுபான தொழிற்சாலைகளுக்கும் அனுமதி வழங்கப்போகிறார்களாம். 2 ஆண்டு ஆட்சியில் 500 மதுபார் கூடியுள்ளது. இன்னும் இந்த ஆட்சி நீடித்தால் இன்னும் 500 பார் புதிதாக வரும். இந்த ஆட்சி நீடிக்க வேண்டுமா? இளைய சமுதாயத்தை அழிக்க ரங்கசாமி முற்பட்டுள்ளார். ரெஸ்டோ பார்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறை செல்லவும் தயங்க மாட்டோம்” பேசினார்.