ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதிலேயே நாராயணசாமி காலத்தை கடத்துகிறார் என அதிமுக செயலாளர் அன்பழகன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.


புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் கூறியதாவது:


காரைக்கால் மாவட்டத்தில் 2008ம் ஆண்டு புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியின் போது காரைக்கால் மாவட்டத்தில் கடற்கரையோரத்தில் சுமார் 650 ஏக்கர் அரசு நிலம் மார்க் என்ற துறைமுகம் அமைத்துக்கொள்ள 30 ஆண்டு காலத்திற்கு குத்தகை விடப்பட்டது. குத்தகைவிடும் போதே குறைந்த விலையில் ஆண்டுக்கு 2.6 கோடி ரூபாய் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த தொகை என்பது மிகவும் குறைவானது, சட்டத்திற்கு விரோதமானது என்றும், தனிப்பட்ட முறையில் மார்க் துறைமுகம் நிறுவனத்திற்கு சலுகை காட்டுகின்ற விதத்தில் கையூட்டு பெற்றுக்கொண்டு ஒப்பந்தம் போடப்பட்டதாக அதிமுக சார்பில் சட்டமன்றத்தில் வலியுறுத்தினோம். கடந்த திமுக காங்கிரஸ் ஆட்சியின் போதும் மதிப்பீட்டு மற்றும் பொது கணக்கு குழு சார்பில் துறைமுகத்தை அய்வு செய்து அதில் தொடர்ந்து நடத்தப்படும் முறைகேடுகள் குறித்தும் துறைமுக வருவாயை கொண்டு பல்வேறு தொழில்களில் திட்டமிட்டு முதலீடு செய்கிறது என்றும், இந்த நிலை நீடித்தால் எதிர்காலத்தில் துறைமுகம் நடத்தமுடியாத சூழ்நிலைக்கு அந்த நிறுவனம் தள்ளப்படும் என மதிப்பீட்டு குழு சார்பில் அப்போதைய தலைவராக இருந்த நான் மற்றும் பொதுக்குழு தலைவர் சிவா ஆகிய இருவரும் பல்வேறு விசாரணைக்கு பிறகு அறிக்கை அனுப்பினோம்.


ஆனால் முதலமைச்சராக இருந்த நாராயணசாமி இந்த இரண்டு குழுக்களின் அறிக்கை மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் திட்டமிட்டு மார்க் நிறுவனம் பயன்பெறும் வித்த்தில் அலட்சியமாக இருந்தார். இன்றைய தினம் மார்க் துறைமுகம் நேர்மையற்ற முறையில் துறைமுகத்தை வைத்து ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்று அந்த கடனை அடைக்க முடியாத சூழ்நிலையை செயற்கையாக உருவாக்கி நேஷனல் கம்பெனி ஆக்ட் வழிமுறை மூலம் இந்த நிறுவனம் தான் கடன் பெற்றதை மறைத்து அதனால் இந்த நிறுவனத்தை நடத்த முடியவில்லை என கூறி வேறு யாருக்கும் வேண்டுமானாலும் விற்பனை செய்து கொடுங்கள் என கூறியுள்ளனர். வேதாந்தா மற்றும் அதானி என்ற இரு நிறுவனங்கள் டெண்டர் கேட்டன. அதில் வேதாந்தா நிறுவனத்தை விட அதானி குழுமம் 1200 கோடி ரூபாய் அதிகமாக டெண்டர் கேட்டதால் அதானி குழுமத்திற்கு இந்த துறைமுக டெண்டரை கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.


இது அரசின் இடம். அரசு இந்த விவகாரத்தில் எந்தவித உரிமைதாரரும் இல்லாமல் பார்வையாளராக இருப்பது என்பது தவறான ஒன்று. அரசின் கட்டுப்பாட்டில் அந்த துறைமுகம் இருக்க வேண்டும்.  ஆளும் அரசு இது தொடர்பாக வெளிப்படையான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். சம்பந்தப்பட்ட முதலமைச்சரோ, அமைச்சரே, தலைமை செயலாளரோ அல்லது துறை செயலாளரோ மார்க் தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தங்கள், எவ்வாளவு காலம், அரசுக்கு உள்ள உரிமை, தற்போதைய நிலை, எவ்வளவு கடன் பெறப்பட்டுள்ளது. தற்போது இந்த துறைமுகம் யாரிடம் கைமாற்றப்பட உள்ளது என்பது குறித்து ஒரு வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்.


புதியதாக எந்த நிறுவனம் குத்தகைக்கு எடுத்தாலும் தற்போதைய காலத்திற்கும் ராயல்டியாக அரசுக்கு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தம் போட வேண்டும். இந்த துறைமுகம் கடத்தலுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. சட்டத்திற்கு விரோதமான செயல்களும் நடைபெற்றது. துறைமுகத்தின் செயல்பாடு சட்டத்திற்கு விரோதமாகவும், முறைகேடாகவும் செயல்பட்டு வந்த்து. இவற்றை கண்டுபிடித்து அதிமுக பலமுறை சிபிஐ விசாரணைக்கு கேட்டோம். தற்போது ஆளும் அரசை பற்றி ஊழலை பற்றி பேச முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கு எந்த தகுதியும் இல்லை. ஆதாரத்துடன் குற்றச்சாட்டு சொல்ல வேண்டும். இந்தியாவை அவமதிக்கும் வித்த்திலும், பிரதமருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் சதி செயலில் ஈடுபடும் அமைப்புகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது.


புதுச்சேரியில் உள்ள குயில் தோப்பு விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி காரைக்காலில் இருந்து சப்-ரிஜிஸ்டரை வரவழைத்து பத்திரம் பதவி செய்தார். தாழ்த்தப்பட்ட அட்டவணை நிதியில் இருந்து பணம் எடுத்து ஒப்பந்தம் இல்லாமல் பல பகுதிகளில் 5 கோடி ரூபாய்க்கு ஹைமாஸ் விளக்குகள் போடப்பட்டது. இது ஊழல், முறைகேடு இல்லையா? அரிசி வாங்கியது, முட்டை வாங்கியது, இலவச துணிகள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது. என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு கடந்த கால ஊழல் ஆட்சியினருடன் சமரசமாக சென்று கொண்டிருக்கிறார்கள். கடந்தகால காங்கிரஸ் திமுக கூட்டணி ஊழலின் போது இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத்து தவறான ஒன்று. ஊழல் செய்தவர்களுடன் சமரசமாக போக கூடாது. ஆதாரமற்ற குற்றசாட்டுகளை அள்ளி வீசுவதிலேயே நாராயணசாமி காலத்தை கடத்துகிறார் என பேசினார்.