புதுச்சேரி: NDA தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இணையாது என்று அக்கட்சியின் தேசிய அமைப்புச் செயலாளர் பிஎல் சந்தோஷ் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக - அதிமுக ஆகிய கட்சிகள் மட்டும் இணைந்து தேர்தலை சந்திக்கும் என்றும் தவெக கூட்டணிக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் தேர்தல் பணிகளை செய்ய வேண்டாம் என்றும் கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
NDA தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக வராது !
புதுச்சேரியில் பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் சந்தோஷ் தலைமையில் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.மாநில தலைவர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். சபாநாயகர் செல்வம் , அமைச்சர்கள் நமச்சிவாயம், ஜான்குமார், எம்.எல். ஏ.,க்கள் சாய் சரவணன்குமார், கல்யாணசுந்தரம், ரிச்சர்டு, தீப்பாய்ந்தான், செல்வம், ராஜசேகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் சந்தோஷ் பேசுகையில், 'வரும் சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், கட்சியை பலப்படுத்த வேண்டும். கடந்த முறையைவிட கூடுதலான இடங்களை கைப்பற்ற வேண்டும். அதற்கு அடித்தளமாக பூத் கமிட்டிகளை வலுப்படுத்த வேண்டும் என, நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினர்.
யார் மெஜாரிட்டி
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் யார் மெஜாரிட்டியை கைப்பற்றுவது என்பதில் கூட்டணிகளுக்குள் மட்டுமல்லாது. கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளுக்குள்ளேயே நீயா நானா யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது.
கடந்த முறை என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக-வை உள்ளடக்கிய NDA என்டிஏ கூட்டணி புதுச்சேரியில் ஆட்சியைப் பிடித்தது. இருந்த போதும் 2024 மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணியின் காங்கிரஸிடம் என்டிஏ கூட்டணி தோற்றுப் போனது. இந்த நிலையில், இப்போது புதுச்சேரியில் இண்டியா கூட்டணிக்கு தலைமை வகிப்பது காங்கிரஸா, திமுகவா என்பதில் பெரும் போட்டியே நடக்கிறது. புதுச்சேரி சட்டப்பேரவையில் திமுக 6 எம்எல்ஏ-க்களுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தில் உள்ளது. காங்கிரஸுக்கு 2 எம்எல்ஏ-க்கள் மட்டுமே இருக்கிறார்கள். இதை மனதில் வைத்து, தங்கள் தலைமையில் தான் கூட்டணி அமைய வேண்டும் என கணக்குப் போடுகிறது புதுச்சேரி திமுக. இந்த நிலையில் தான் NDA கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக 15 தொகுதிகளில் போட்டியிடுவோம் என்கின்றனர். கடந்த முறை பாஜக 9 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களை வென்றது. இந்த முறை 12 சீட்டோ அல்லது 15 சீட் என இரட்டை இலக்கத்தை எதிர்நோக்கியுள்ளது.
இரட்டை இலக்கத்தில் சீட்
இந்த நிலையில் புதுச்சேரியில் பாஜக உயர்மட்டக் குழு நிர்வாகிகளுடன் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் நேற்று இரவு முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வியூகங்களை தொடர்பாக நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழக வெற்றிக் கழகம் வருமா என்று நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்க்கு பதிலளித்து பேசிய பி.எல்.சந்தோஷ்., தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கட்சிகள் தான் உள்ளன. இவை இணைந்தே சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும். நமது கூட்டணியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இணைவதற்கு வாய்ப்புகள் இல்லை. கூட்டணியில் இருந்து என்.ஆர்.காங்கிரஸ் வெளியேறி தவெகவுடன் கூட்டணி வைப்பதற்கான சாத்தியக் கூறுகளும் தற்போது இல்லை. அதுபோன்று வரும் தகவல்களும் உண்மை கிடையாது அவையல்லாம் வதந்திகள். விஜய் கூட்டணிக்கு வருவார் என்று கருதி தேர்தல் பணியாற்ற வேண்டாம், அதேபோல் இந்த சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்க எண்ணில் தான் போட்டியிட உள்ளோம் என்று நிர்வாகிகளுக்கு தெரிவித்தார்.
தவெக இடம்பெற வாய்ப்பு இல்லை!
தவெக தங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என பாஜக தலைவர்கள் வெளிப்படையாகவே அழைப்பு விடுத்தனர். ஆனால் இதனை நிராகரித்த தவெக, பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை, முதல்வர் வேட்பாளர் விஜய்தான், தவெக தலைமையில்தான் கூட்டணி என அறிவித்துவிட்டது. விஜய் கட்சியில் பொதுச் செயலாளராக புதுச்சேரியைச் சேர்ந்த புஸ்ஸி ஆனந்த் பணியாற்றி வருகிறார். இவர் இதற்கு முன்பு என்.ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இதனால் ரங்கசாமி விஜய் இடையே மிகுந்த நெருக்கம் இருந்து வருகிறது. அண்மையில் ரங்கசாமி பிறந்தநாளுக்குக் கூட விஜய் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதனால் புதுச்சேரியில் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கலாம் என்று கூறப்பட்டது. தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் அங்கம் வகிப்பதால், அதில் தவெக இடம்பெற வாய்ப்பு இல்லை.