கேமதாதுவின்  அணை கட்டுவதை கண்டித்து தஞ்சை பனகல் பில்டிங் அருகில்  ஆகஸ்ட் 5ம் தேதி பாஜக சார்பில்   ஆர்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக  மூத்த தலைவர்கள் எச்.ராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொள்வதாக இருந்தது. பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின் பெரிய அளவில் பாஜக முன்னெடுத்த ஆர்பாட்டமாக அது இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அது மட்டுமின்றி விவசாயிகள் அதிகம் உள்ள டெல்டா பகுதியில் ஆர்பாட்டம் செய்து, விவசாயிகளின் நன்மதிப்பை பெற பாஜக திட்டமிட்டிருந்துது. அந்த ஆர்பாட்டத்திற்கு அனுமதி கேட்டு பாஜக சார்பில் போலீசாரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா  தொற்று காரணமாக ஊரடங்கு இருக்கும் நிலையில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அனுமதி மறுத்து, டிஎஸ்பி ராஜ்குமார் உத்தரவிட்டார். அதற்கான விளக்கக் கடிதத்தையும் பாஜகவினரிடம் போலீசார் வழங்கினர்.


போலீசாரின் இந்த முடிவுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், திட்டமிட்டபடி பாஜகவின் மாநில தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் பாஜகவின் மாவட்ட பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.


இதுகுறித்து பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய் சதீஷ் கூறுகையில்,


‛‛மேகதாதுவில் அணை கட்டுவதை கண்டித்து தஞ்சை பனகல் பில்டிங்கில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய செயலாளர் ஹெச் ராஜா, எம்பி இல கணேசன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்,  எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார்  தடை விதித்துள்ளனர். ஆனால் ஆர்ப்பாட்டம் தடையை மீறி நடைபெறும்,’’ என்று தெரிவித்துள்ளார். 


போலீஸ் தடை விதித்துள்ள நிலையில் ,அதை மீறி ஆர்பாட்டம் நடைபெறும் என பாஜக அறிவித்துள்ளதால் தஞ்சையில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. ஆர்பாட்டத்தில் பங்கேற்க வரும் தலைவர்களை எல்லையில் கைது போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலை மாநிலத் தலைவராக பொறுப்பேற்று நடத்தும் ஆர்பாட்டத்தை ஒடுக்கவே அரசு இந்த அனுமதி மறுப்பை கையில் எடுத்துள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.