உத்தரப் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்த பிரியங்கா காந்தி, ”சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் முகம் நான்தான் எனக் கூறினார். இந்த நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரியங்கா காந்தி அளித்த பிரத்யேக பேட்டியில் காங்கிரஸின் முகம் நான் மட்டுமல்ல என விளக்கமளித்துள்ளார்.
உத்தரப்பிரதேச தேர்தல் களத்தில் பாஜக, சமாஜ்வாதி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியும் அதன் தலைவர் மாயாவதியும் இருக்கிற இடமே தெரியாமல் படு அமைதியாக இருக்கின்றனர். இத்தனைக்கும் பிப்ரவரி 10-ந் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி படுதீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.
உத்தரப்பிரதேசத்தில் சிங்கிள் டிஜிட் இடங்கள் என இழந்து போய்விட்ட செல்வாக்கை மீட்க, காங்கிரஸுக்கு உயிர் கொடுக்க பிரியங்கா காந்தி தீவிரமாக முயற்சித்து வருகிறார். 2017 சட்டசபை தேர்தலில் காங்கிரஸுக்கு வெறும் 7 இடங்கள்தான் கிடைத்தது. தற்போதைய தேர்தலிலும் அதே நிலைமைதான் என்கின்றன கருத்து கணிப்புகள்.
இந்நிலையில் தேர்தல் களத்தில் அதிரடியாக 40% பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி அறிவித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அதேபோல் உ.பி. தேர்தல் பிரசார களத்தில் அடுத்தடுத்து பல்வேறு அறிவிப்புகளை பிரியங்கா காந்தி வெளியிட்டும் வருகிறார். இதன் அடுத்த கட்டமாக இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை நேற்று பிரியங்கா, ராகுல் காந்தி ஆகியோர் வெளியிட்டனர். அப்போது, நீங்கள்தான் உ.பி.தேர்தலில் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளரா? என செய்தியாளர் ஒருவர் பிரியங்காவை நோக்கி கேள்வி எழுப்பினார். இதற்கு நமட்டு சிரிப்புடன், உத்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் வேறு யாருடைய முகமாவது உங்களுக்கு தென்படுகிறதா? உத்தரப்பிரதேசத்தில் ஒவ்வொரு இடத்திலும் என்னுடைய முகத்தைப் பார்க்க முடியும் என்றார்.
உ.பி. சட்டசபை தேர்தலில் பிரியங்கா காந்திதான் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் என்பதை மறைமுகமாக குறிப்பிட்டார். அவர் பேசும் வார்த்தைகளில் ஆணவம் இருக்கிறது, திமிரில் பேசுகிறார் போன்ற சர்ச்சைகள் எழுந்ததால், அவர் அதனை விளக்கியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்த விளக்கத்தில், "உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் நான் மட்டுமே காங்கிரஸின் முகம் எனக் கூறவில்லை. நீங்கள் ஒரே கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்டதால் அதை சற்று மிகைப்படுத்திக் கூறினேன். நிறைய மாநிலங்கள் உள்ளன. அங்கெல்லாம் பாஜகவாக இருந்தாலும் சரி, காங்கிரஸாக இருந்தாலும் சரி, மேலிடப் பொறுப்பாளர்கள் இருப்பார்கள். நீங்கள் முதல்வர் வேட்பாளரா என அவர்களிடம் கேட்பீர்களா? பிறகு ஏன் இந்தக் கேள்வி என்னிடம் முன் வைக்கப்படுகிறது?" என்றார் அவர். உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.