விழுப்புரம்: விழுப்புரம் அருகில் உள்ள சிறுவந்தாடு பகுதியில் திமுக அரசை கண்டித்தும், விலைவாசி உயர்வை கண்டித்தும் அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.


அதிமுக எம்பி சி.வி.சண்முகம் பேசியதாவது:


சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தண்ணீருக்கும், பாலுக்கும் அல்லாடும் சூழல் உள்ளது. மழை ஓய்ந்து எட்டு நாட்களுக்குப் பிறகும் மழை நீரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. திறமை இல்லாத ஒரு நிர்வாகம். முதுகெலும்பில்லாத, நிர்வாகத் திறமையற்ற ஒரு முதலமைச்சரும், அமைச்சர்களும் உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள அரசு மதுபான கடைகளில் ரூ.5000 கோடிக்கு மேல் வசூல் செய்து முறைகேடு நடந்துள்ளது என ஆளுநரிடம் புகார் கொடுத்ததினால் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் உள்ளார். திமுக - பாஜக தற்போது கள்ள உறவில் உள்ளனர். திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து ஊழல் பட்டியல்களை வெளியிட்ட அண்ணாமலை தற்போது அமைதியாக உள்ளார்.


மழை வெள்ளத்தில் திமுக சிறப்பாக செயல்பட்டதாக அண்ணாமலை கூறுகிறார். தமிழகத்தில் ஆய்வுக்கு வந்த மத்திய குழுவினரும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டதாக கூறுகின்றனர். இன்றைக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கிறது. ஆனால் சென்னையில் ஒரு லிட்டர் பால் 200 ரூபாய். தண்ணீர் கேன் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்ளை மீட்க படகுக்கு 2000 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கார் ரேஸ் நடத்தினால் திமுக நூறு ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது. மக்களின் கோபம் திமுக மீது திரும்பி உள்ள காரணத்தினால் ஆறாயிரம் ரூபாய் நிவாரணத்தை அறிவித்துள்ளது. டி.ஆர்.பி ராஜா முதல்வரை விமர்சனம் செய்தால் அடிப்பேன் என முகநூலில் பதிவிடுகிறார்.


அன்றைக்கு அமைச்சர்கள் யாரும் கோட்டைக்கு செல்வதில்லை கோப்புகளில் கையெழுத்து இருப்பது மட்டுமே அவர்களின் வேலையாக உள்ளது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் சிந்தித்துப் பார்த்து வாக்களிக்க வேண்டும். மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, ஒருபுறம் பிரதமர் தமிழ், தமிழ் என பேசுகிறார். மற்றொருபுறம் தமிழுக்கு எதிரான அனைத்து வேலைகளையும் செய்கிறார்கள். கடந்த 9 ஆண்டுகளில் 300 ரூபாய் விற்பனை செய்த கேஸ் சிலிண்டர் தற்போது 1200 ரூபாய். தேர்தல் வருவதால் 200 ரூபாய் குறைத்திருக்கிறார்கள்.


தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் 2000 ரூபாய்க்கு உயர்ந்து விடும். மக்கள் இதனை சிந்தித்து வாக்களிக்க வேண்டும். 33 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்ற திமுக, தமிழக மக்களின் பிரச்சினைகளை குறித்து பேசியதும் இல்லை, போராடியதும் இல்லை என குற்றம்சாட்டினார்