இன்றைக்கு ஒரு மேடையில் நான் நிற்க காரணம் மக்களுடைய அன்பும், நம்பிக்கையும் தான் என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். 


விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு “அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு”  ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நேற்று காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் அம்பேத்கர் சுடர் விருது பிரகாஷ்ராஜூக்கு வழங்கப்பட்டது. 


இந்நிகழ்ச்சியில் பேசிய பிரகாஷ்ராஜ், “திருமாவளவனுக்கு என்னை நன்றாக புரியும். நான் அரசியல், தேர்தல் பற்றி நிறைய இடங்களில் பேசிக்கொண்டு இருந்தேன். நான் வாக்களிக்க சென்ற போது எனக்கு போன் செய்து உங்களை பார்த்தே ஆக வேண்டும் என சொன்னேன். இருவரும் சந்தித்தோம்.


என்னிடம் உங்களை எந்த கட்சி மேடைகளிலும் பார்க்க முடியவில்லையே என கேட்டார். அதற்கு என்னால் எந்த கட்சிக்கும் சாதகமாக நிற்க முடியாது என சொன்னேன். பின்னர் உங்களுக்கு ஒரு விருது கொடுக்கணும். அது கட்சி சார்ந்து கொடுக்கணும் என திருமாவளவன் கூறினார். நான் போராடுற கொள்கைக்காக போராடும் நீங்களும், உங்கள் கட்சியினரும் என் தோழர்கள். நான் வருகிறேன் என சொன்னேன். 


விசிக தலைவர் திருமாவளவன் போல அரசியலில் என்னுடையது நீண்ட கால பயணம் இல்லை. ஆனாலும் என்னை ஏன் பேசுகிறீர்கள் என கேட்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள நினைக்கிறேன். ‘உடம்புக்கு ஒரு காயமானால் நாங்க சும்மா இருந்தாலும் அந்த வலி காணாமல் போய் விடும். ஆனால் ஒரு சமுதாயத்துக்கு நாட்டுக்கு காயமானால் நாம் பேசாமல் இருந்தால் அதிகமாகி விடும். நான் ஒரு கலைஞன் தான். திறமையால் ஆகவில்லை. இன்றைக்கு ஒரு மேடையில் நான் நிற்க காரணம் மக்களுடைய அன்பும், நம்பிக்கையும் தான். 


ஒரு கலைஞன் கோழையானால் சமுதாயம் கோழையாகி விடும். நான் செய்வதி என்னுடைய கடமை. என்னுடைய திறமையால் இந்த புரிதல் வரவில்லை. அம்பேத்கர், காந்தி, கார்ல் மார்க்ஸ் போன்றோரை படித்ததால் வந்தது. பிரதமர் மோடியை கடந்த 10 ஆண்டுகளாக எதிர்த்து கொண்டிருக்கிறேன். அவரை மன்னர் என சொல்ல முடியாது. இப்போது தெய்வ குழந்தையாகி விட்டார். நாட்டுக்கு அவரால் ஏதாவது துன்பம் ஏற்பட்டால் மனிதனா நீ என கேட்க முடியாது. தெய்வம் சோதிக்கும் என்று தான் சொல்ல வேண்டும்.