பொங்கல் என்றால், தித்திக்கும் . ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பண்டிகை என்றால் பொதுமக்களுக்கு தித்தித்தது. காரணம், பொங்கல் பரிசாக, அரிசி, வெல்லம், கரும்பு என்று இருந்ததிலிருந்து, ரொக்கத் தொகை வழங்கப்பட்டது. அது 500, 1000 அல்ல, 2500 ரூபாய். இந்த ஆண்டு, இதுவரை பொங்கல் தொகுப்போடு பணம் வழங்கும் அறிவிப்பு வெளியாகவில்லை. கடந்த முறை எதிர்கட்சியாக இருந்த திமுக, 2500 ரூபாய் பத்தாது, 5000 ரூபாய் வழங்க வேண்டும் எனக்கூறியிருந்தது. இந்த முறை ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக பொறுப்பேற்ற பின், கடந்த முறை வலியுறுத்திய 5 ஆயிரம் ரூபாயை வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த அறிவிப்பு வெளியாகவில்லை. இது தொடர்பாக அதிமுக-திமுகவினரின் கருத்துக்களை கேட்டது ஏபிபி!
திமுக செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் கேட்டபோது.
‛‛தலைவர் சிறப்பான அறிவிப்பை நிச்சயம் வெளியிடுவார். பொங்கல் பரிசுத் தொகையாக பணம் கட்டாயம் தருவார். எவ்வளவு என்பதை நான் கூற முடியாது; தலைவர் தான் அந்த அறிவிப்பை வெளியிடுவார்,’’ என்றார்.
அரசின் இந்த முடிவு குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது,
‛‛இது ஒரு ஏமாற்று அரசு. மக்களை முழுக்க ஏமாற்றும் செயலாக தான் இந்த அரசின் ஒவ்வொரு செயலும் உள்ளது. ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு ரூ.1000 தருவோம் என்றார்கள். காஸ் சிலிண்டர் மானியம் தருவதாக கூறினார்கள், அதுவும் தரவில்லை. பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை. கடந்த பொங்கலுக்கு நாங்கள் ரூ.2500 கொடுத்தோம். இந்த முறை ரூ.3000 அல்லது ரூ.5 ஆயிரம் கொடுத்திருக்கலாம். வாக்குகளை பெற பொய்யான வாக்குறுதி கொடுத்து, 8 மாதத்தில் மக்களிடம் கடுமையான அதிருப்தியை பெற்றுள்ளனர்.
நகைக்கடன் தள்ளுபடியில் 35 லட்சம் பேரை ஏமாற்றி விட்டார்கள். மலையளவு எதிர்பார்க்கும் மக்களிடம், கடுகு அளவு கூட செய்யாமல் ஏமாற்றிவிட்டார்கள். இது உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும். எதிர்கட்சி மீது பழி போடுவதை விட்டு விட்டு, மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்ய வேண்டும். அடுத்தவர் மீது குற்றம் சொல்லி தப்பிப்பதை விட, உருப்பாடியாக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்.
நிதிப்பற்றாக்குறை மீது பழி போட முடியாது. இதே நிதி நிலைமையில் தான் நாங்களும் கொடுத்தோம். அந்த சாமர்த்தியம் இவர்களுக்கு இல்லை. நிதி மேலாண்மையை பெருக்க குழு அமைத்தார்கள். அந்த குழு என்ன செய்தது? என்ன நிதி மேலாண்மை உயர்ந்தது? அவர்களுக்கு ஊதியம் வழங்கி அரசுப்பணம் தான் மேலும் வீணாகிறது. இது விடியல் ஆட்சி அல்ல; விடியா ஆட்சி. இதையெல்லாம் முன்னெடுத்து போராட்டம் செய்ய தயாராக உள்ளோம்,’’ என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்